1 Sept 2016

60 வருடங்களுக்கு மேலாக அல்லற்படுகின்றோம் குடியிருக்கும் வீட்டை பெற்றுத்தாருங்கள். ஏறாவூர் நகரசபைத் தொழிலாளர்கள் வேண்டுகோள்

SHARE
மட்டக்களப்பு ஏறாவூர் நகர சபையின் தொழிலாளிகளாக கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தியாகம் செய்து வந்துள்ள
எங்களுக்கு குடியிருக்க சொந்தமாக ஒரு வீடு இல்லை. கவனிப்பாரின்றிக் கைவிடப்பட்டுள்ளோம் என ஏறாவூர் 4ஆம் குறிச்சி ரீசி குவார்ட்டஸில் வசிக்கும் சுகாதாரத் தொழிலாளர்களான 10 குடும்பங்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி அவர்கள் மேலும் தெரிவிக்கையில்@ கடந்த 60 வருடங்களாக ஏறாவூர் நகர சபையின் சுகாதாரத் தொழிலாளிகளாக எங்களை அர்ப்பணித்து பணிபுரிந்து வரும் எமது துன்பநிலையை எவரும் கரிசனை கொண்டு பார்த்தாகத் தெரியவில்லை.

ஏறாவூர் சுகாதார நகர சுத்தித் தொழிலாளர்களுக்காக  ரீசி குவார்ட்டஸ் 60 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டது.

இங்கு சிறிய ஒரு அறை கொண்ட இந்த குவார்ட்டஸ் குடியிருப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இதில் 5 பேருக்கு மேற்பட்ட குடும்ப அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பமும் உள்ளது.

மொத்தம் 10 குடும்பங்கள் இந்த குவார்ட்டஸின் சிறிய ஒற்றை அறைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளோம்.

மேலும், கடந்த 60 வருடகாலமாக எமது இந்த குவார்ட்டஸ் எதுவித திருத்தங்களும் மேற்கொள்ளப்படாது சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றது.

அஸ்பெஸ்டஸ் கூரை வேயப்பட்ட இந்த குவார்ட்டஸில் வெயில் காலங்களில் உள்ளே இருப்பது என்பது ஒரு சித்திரவதையாக உணர்கின்றோம். மழை காலங்களில் ஒழுக்கு.

மாரிகாலத்தில் இந்த குவார்ட்டஸ் அமைந்துள்ள பகுதி வெள்ளக்காடாக மாறிவிடுகின்றது.

வெள்ள நீரில் முதலைகளும், பாம்புகளும், அட்டைகளும், புழு பூச்சிகளும் எமது வீடுகளுக்குள் படையெடுக்கின்றன.

சில வேளைகளில் மயானங்களிலிருந்து வெள்ள நீரில் அடித்துச் செல்லப்படும் பிணங்களும் மிதந்து வருவதுண்டு.

இது ஒரு புறமிருக்க இந்த குவார்ட்டஸ் பகுதி என்பது சமூக அந்தஸ்தையும் குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது.

மேலும், சுற்றறிக்கை இலக்கம் 1979ஃ19  இன்படி உள்ளுராட்சி; மன்றங்களுக்குச் சொந்தமான வீடுகளை அவற்றில் வசிப்பவர்களுக்கே இலவசமாக உரிமை மாற்றம் செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதோடு  நாட்டின் பெரும்பாலான இத்தகைய உள்ளுராட்சி மன்றக் குடியிருப்புக்கள் அவற்றில் வசிப்பவர்களுக்கு ஏற்கெனவே கையளிக்கப்பட்டும் விட்டன.

ஆனால், ஏறாவூர் நகர சபை மாத்திரம் இந்த விடயத்தில் பாராமுகமாக உள்ளது.

இது குறித்து நாம் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர், உதவி ஆணையளார், மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு அறிவித்தும் எதுவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என குடியிருப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

















SHARE

Author: verified_user

0 Comments: