மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி, பரீட் நகர் பகுதியில், 29.08.2016
திங்கட்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் பெண்ணைப் தடிகளால் தாக்கிவிட்டு இரண்டு இலட்ச ரூபாய் பணம் மற்றும் 20 பவுண் தங்க நகைகள் என்பன திருடப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடிப் பொலிஸார் புலன்விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில் எதிர்பாராத திருப்பமாக திருடப்பட்ட நகைகள் அனைத்தும் திருடப்பட்ட அதே வீட்டு வளவிற்குள் சனிக்கிழமை மாலை (செப்ரெம்பெர் 10, 2016) வீசப்பட்டுக் கிடந்ததாக பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் நகைகளை மீட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
சம்பவ தினம் வீட்டிலிருந்த பெண் மலசலகூடத்துக்குச் செல்ல முற்பட்ட போது வீட்டு வளவிற்குள் மறைந்திருந்த திருடன் வீட்டிலிருந்த மற்றவர்கள் உறக்கத்தில் இருந்த சமயம் அந்தப் பெண்ணை மாத்திரம் தடிகளால் தாக்கிவிட்டு பணத்தையும் நகைகளையும் திருடியதாக முறைப்பாடு பதியப்பட்டிருந்தது.
அதன்பின்னர் தாக்குதலுக்குள்ளான பெண், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தார்.
காத்தான்குடி பொலிஸார் தற்சமயம் மீட்கப்பட்ட நகைகளை தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment