இரசாயனங்களைத் தவிர்த்து இயற்கை விவசாயத்தை மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியமும் அதிக இலாபத்தையும்
பெற்றுக் கொள்ள முடிவதுடன் இயற்கை வளத்தை மாசு படுத்தாது சுற்றுச் சூழலையும் பாதுகாக்க முடியும் என ஏறாவூர் விரிவாக்கல் பிரிவு விவசாயப் விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன் தெரிவித்தார்.
உக்கக் கூடிய திண்மக் கழிவுகளைப் பயன்படுத்தி கூட்டுப் பசளை உற்பத்தியும் அதன் பயன்பாடும் தொடர்பாக ஏறாவூர் பிரதேச விவசாயிகளுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (30.08.2016) ஏறாவூர் வாவிக்கரையிலுள்ள சுலைமாலெப்பை உஸனார் என்பவரின் மரக்கறித் தோட்டத்தில் இடம்பெற்றது.
யுனொப்ஸ் (ருNழுPளு) நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விவசாயிகள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன், சேதன உணவுற்பத்தி முயற்சி என்பது நம்முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த வழிமுறையாகும். ஆனால் நவின தொழினுட்ப வளர்ச்சி காரணமாக இந்தப் பாரம்பரிய வழிமுறைகளை நமது விவசாயிகள் புறந்தள்ளி விட்டு நவீன அவசர உலகத்திற்குள் புகுந்திருக்கின்றோம்.
பெருநிலப் பரப்புக்களில் இரசாயனம் கலந்து மேற்கொள்ளப்படுகின்ற விவசாய உணவுகளை அதிக விலை கொடுத்து வாங்கி உண்ணும் பழக்கமுடையவர்களாக நாம் மாறிவிட்டோம்.
இத்தகைய நஞ்சு கலந்த விவசாய உற்பத்திப் பொருட்களை உண்பதால் நமது உடலாரோக்கியம் கெட்டுப் போய் நாளடைவில் நோயாளியாகி விடுகின்றோம்.
இத்தகைய உணவுகளை உண்பதால் இப்பொழுது நம்மில் குழந்தைகள் தொடக்கம் வளர்ந்தோர் வரை அநேகம் பேருக்கு ஏதோவொரு உடல் உபாதை இருக்கிறது.
இந்த ஆரோக்கியக் கெடுதல் இல்லாமல் நாம் சுக தேகியாக வாழ்வதென்றால் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு அந்த உணவுகளை உண்ண வேண்டும்.
நவீன தொழினுட்பமும் அவசர முடிவுகளும் நமது கண்ணுக்குக் குளிர்ச்சியாகத் தெரிந்தாலும் அவற்றின் பின்னே ஒழிந்திருக்கும் ஆபத்துக்கள் அபாரமானவை.
எனவே, அந்த ஆபத்தைக் குறைத்து இந்த உலகை அழிவின் விளிம்பிலிருந்து காப்பதற்காக நாம் மீண்டும் நம்முன்னோர்களின் இயற்கை விவசாய முறைமைக்குச் செல்ல வேண்டியிருக்கின்றது.
இந்த இயற்கை விவசாயத்தை மேற்கொள்வதன் மூலம் நமக்குத் தேவையான மரக்கறிகளையும், கிழங்குகளையும், கனி வர்க்கங்களையும் நமது வீட்டுச் சூழலில் நாமே உற்பத்தி செய்து கொள்ள முடியும்.
அவ்வாறு வாழ்ந்தால் ஆரோக்கியமும், ஆயுளும் நீடிப்பதோடு பொருளாதாரத்தையும் மீதப்படுத்தி இயற்கையையும் அதன் சூழலையும் பசுமை குன்றாமல் பாதுகாக்கலாம்.
அன்றாடம் நமது வீட்டில் சேரும் எத்தனையோ வகையான உக்கக் கூடிய கழிவுப் பொருட்களை நாம் தெருவுக்குக் கொண்டு வந்து குவிப்பதால் திண்மக் கழிவகற்றல் என்பது உள்ளுராட்சி நிருவாகத்திற்கும் ஒரு சவாலாய் அமைந்துள்ளது. மேலும் நீரோடைகளில், வடிகான்களில் வாவிக் கரைகளில் இந்த சாக்கடைக் கழிவுகள் கொட்டப்படுவதால் டெங்கு போன்ற அபாயகரமான உயிர்க் கொல்லி நோய்களுக்கும் நாம் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. எனவே இந்த சமகால நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு இயற்கை விவசாயமே சிறந்த வழிமுறையாகும்”என்றார்.
0 Comments:
Post a Comment