மதங்களின் பெயரால் மனிதர்களைக் கொல்வதற்கும் தீங்கிழைப்பதற்கும் அனுமதிக்க முடியாது என கிழக்கு மாகாண சபை வீதி, காணி மற்றும் மகளிர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி தெரிவித்தார்.
ஏறாவூர் புன்னைக்குடா – கடற்கரை வரையான வீதி மற்றும் மீராகேணி சவுக்கடியை இணைக்கும் வீதி என்பனவற்றுக்கான அபிவிருத்தி வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றது.
கடந்த யுத்தத்திற்கு முந்திய காலத்திலிருந்தே செப்பனிடப்படாதிருந்த இந்த வீதிகளை நவீன மயப்படுத்துவதற்காக கிழக்கு மாகாண சபை சுமார் 4 கோடி ரூபாவை ஒதுக்கி இந்த அபிவிருத்தி வேலைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த இரண்டு வீதிகளும் நவீன வீதிகளாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆரியவதி@ சிலர் மதங்களை தமது பிழையான நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதால் ஆங்காங்கே அமைதியைக் குலைக்கும் பிரச்சினைகள் எழுகின்றன.
என்னைப் பொறுத்த வரையில் நான் எல்லா மதங்களுக்கும் உரிய கண்ணியத்தைக் கொடுக்கின்றேன்.
முஸ்லிம் பிரதேசங்களிலே நான் நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கும்போது பள்ளிவாசல்களில் இருந்து தொழுகைக்கான அழைப்பொலி கேட்டால் எனது பேச்சை நிறுத்தி அந்த அழைப்புக்கு கண்ணியம் கொடுக்கின்றேன்.
மதங்கள் போதிக்கும் சிறந்த விழுமியங்களுக்கு எப்போதும் எல்லோரும் தலை வணங்க வேண்டும்.
அதேவேளை மதங்களின் பெயரால் வன்முறைகள் நிகழ்வதற்கு வழிசமைத்து விடக் கூடாது.
நான் இனம், மதம், மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கப்பால் மக்களை நேசிப்பவள். எங்கு தேவையுள்ளதோ அங்கு சேவை செய்ய வேண்டும் என்று சிந்திப்பவள். அதனால்தான், நான் எனது சொந்த மாவட்டமான திருகோணமலையை விட எனது அயல் மாவட்டங்களான மட்டக்களப்புக்கும் அம்பாறைக்கும் அதிக சேவைகளைச் செய்கின்றேன். ஏனென்றால் அங்கு சேவைகள் செய்ய வேண்டிய தேவைகள் உள்ளன.
மனித சமூகத்தில் பெண்களும் ஒரு அங்கமாக உள்ளார்கள்.
எனவே, பெண்களை ஒதுக்கி வைத்து விட்டு ஆண்கள் மாத்திரம் இந்த உலகை ஆள முடியாது.
பெண்களை அரவணைத்து, ஆதரித்து, அறிவிலும் அபிவிருத்தியிலும் பங்காளர்களாக்கிக் கொண்டு இந்த மாகாணத்தை முன்னேற்ற வேண்டும்.
கிழக்கு மாகாண சபையிலே நான் தன்னந்தனியே ஒரு சாதனைப் பெண்ணாக வலம்வருகின்றேன். எனக்கு அங்குள்ள ஆண் உறுப்பினர்கள் ஊக்கமும் உதவியும் வழங்குவதால் என்னால் அதிக சேவைகளைச் செய்ய முடிகின்றது” என்றார்.
0 Comments:
Post a Comment