மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பழைமைவாய்ந்த மெதடிஸ் மத்திய கல்லூரி உடனடியாக தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட வேண்டும் என மட்டு. அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும்,
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அரசாங்கத்திடம் வேண்டு கோள்விடுத்தார்.
மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளுக்குள் உள்வாங்குவது தொடர்பான பிரேரணை மீதான விவாதம் புதன்கிழமை (24) நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்படி வேண்டுகோளை விடுத்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது…
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பழைமைவாய்ந்த 150 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட பாடசாலை மட்டு. மெதடிஸ் மத்திய கல்லூரி. பல்லாயிரக்கணக்கான கல்விமான்களை, அரசியல் தலைவர்களை உருவாக்கிய ஒரு முன்னணி பாடசாலை. துரதிஷ்ட வசமாக இப்பாடசாலை தேசிய பாடசாலைக்குள் உள்வாங்கப்படாமையினால் அதன் தேவைகள் - வளங்கள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்ட போது மெதடிஸ் கல்லூரிக்கும் சென்றிருந்தார். இதன் போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்திக் குழு, பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என நாங்கள் எல்லோரும் இனைந்து இந்தப்பாடசாலையை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தித் தருமாறு அவரிடம் வேண்டுகோள்விடுத்தோம்.
ஆகவே, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
யுத்தகாலத்திலும் கல்விப் பணியாற்றிய இப்பாடசாலையில் இன மத பேதங்களுக்கு அப்பால் தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து கல்வி கற்றனர். இன்றும் அவ்வாறே இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் ஒன்று சேர்ந்து படிக்கின்ற கல்விப்பணிக்கு மிகப்பெரும் சேவையாற்றுகின்ற பாடசாலை மெதடிஸ் மத்திய கல்லூரி.
ஆகவே, இப்பாடசாலை முன்னேற்றப்பட வேண்டும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். நாங்களும் எம்மால் இயன்ற முயற்சிகளை செய்து வருகின்றோம். எனவே, மட்டக்களப்பில் கல்விப் பணிக்கு புகழ் பெற்ற மெதடிஸ் கல்லூரியை தேசிய பாடசாலையாக உடனடியாக தரமுயர்த்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
0 Comments:
Post a Comment