“நாங்கள் அரச பிரதிநிதிகள் அல்ல மக்களின் குரலாக இயங்குகின்ற சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளேதான்”என
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறை தேசிய செயலணியின் உறுப்பினரான முன்னாள் பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு தெரிவித்தார்.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அமர்வு செவ்வாய்க்கிழமை (ஓகஸ்ட் 16, 2016) வாகரை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது செயலணியின் முன் தங்களது கருத்துக்களை வெளியிடுவதற்காக வருகை தந்திருந்த பிரதேசப் பொதுமக்களிடம் அவர் பொறிமுறையின் நோக்கம் பற்றி தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்து அங்கு கருத்துத் தெரிவித்த அவர்…
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களது கருத்துக்களை அறிந்து அதனைச் சமர்ப்பிப்தற்காக நாங்கள் மக்களை நாடி வந்திருக்கின்றோம்.
இந்த நல்லிணக்க பொறிமுறைக்கு மக்களிடம் கருத்துக்களை அறிவதற்காக இந்த செயலணி அரசினால் உருவாக்கப்பட்டிருந்தாலும், இந்த செயலணியில் உள்ள பிரதிநிதிகள் எவரும் அரசின் பிரதிநிதிகள் அல்ல.
நாங்கள் மக்களின் குரலாகச் செயற்படுகின்ற சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளேயன்றி வேறில்லை. இந்த செயலணியில் சமூகத்தை நன்கு புரிந்து கொண்ட சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகள், சட்டத்துறை நிபுணர்கள், மற்றும் இதுபோன்ற பல்வேறு துறைசார்ந்த நிபுணர்களும்; உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள்.
மேலும், மக்களிடம் பெறப்படும் இந்த கருத்துக்கள் அடங்கிய அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படவிருக்கின்ற அதேவேளை, ஏக காலத்தில் இந்த அறிக்கை பொதுமக்களுக்குப் பகிரங்கப்படுத்தப்படும். அது ஒரு போதும் இரகசியமாக வைக்கப்பட மாட்டாது. ஊடகங்களில் அது ஆவணமாகக் கிடைக்கும்.
அது அனைத்துப் பொதுமக்களுக்கும் எட்டக் கூடியதாக செய்யப்படும்.
இது செயலணி பரணகம ஆணைக்குழு போன்றதோ அல்லது அதற்கு முன்னர் அமைக்கப்பட்ட வேறு ஆணைக்குழுக்கள் போன்றதோ அல்ல.
ஆகையினால் இந்த செயலணியினரிடம் மக்கள் தங்களது கருத்துக்களையும் அபிலாஷைகளையும் தயக்கமின்றி வெளியிடலாம்.” என்றார்.
0 Comments:
Post a Comment