24 Aug 2016

குடிநீரையும் இன ரீதியாகப் பிரிக்க வேண்டாம் மகளிர் அமைப்பின் தலைவி மன்றாட்டம்

SHARE
“இயற்கை அருளான தாகத்திற்கு குடிக்கும் தண்ணீரையும்இன ரீதியாகப் பிரித்து வழங்க  வேண்டாம் என ஏறாவூர் ஹிதாயத்நகர் தாறுஸ் ஸலாம் மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் ஏ.எப். நுஸ்லா
மற்றும் பொருளாளர் ஏ.எம். ஆமினார் ஆகியோர் மன்றாட்டமான வேண்டுகோளை முன்வைத்தனர்.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வு புதன்;கிழமை (ஓகஸ்ட் 24, 2016) ஏறாவூர் நகர பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் வசிக்கும் மக்கள்   செயலணியின் முன் ஆஜராகி தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

தொடர்ந்து அங்கு தனது அபிலாஷைகளை வெளியிட்ட சித்தி நயீமா, இன ரீதியிலான பாகுபாடுகளால் நாடு பிளவுபட்டுக் கிடக்கிறது. இன ரீதியான பாரபட்சங்களை  உடனடியாக இல்லாமற் செய்;ய வழி காண வேண்டும்.
குடிநீர் வழங்குவதற்காக கிணறு கட்டிக் கொடுக்கும்போது கூட இன ரீதியாக ஏன் சிந்திக்க வேண்டும். எனது ஹிதாயத் நகர் கிராமத்திற்குப் பக்கத்திலுள்ள தமிழ் மக்கள் மஞ்சள் நிறமான தூய்மையற்ற தண்ணீரைப் பருகுகின்றார்கள். அவர்கள் தமிழ் மக்கள் என்று பாராமல் முஸ்லிம் எயிட் நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுத்து நான் 10 கிணறுகளைக் கட்டிக் கொள்ள உதவியிருக்கின்றேன்.

தமிழ் அரசியல்வாதிகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் என்று இனப்பாகுபாடுகாட்டி இயற்கை வளங்களை பிரிக்கக் கூடாது.

இந்த நாட்டில் வாழும் தமிழரோ, சிங்களவரோ, முஸ்லிமோ எல்லோரும் ஒரே நீரையே பருகுகின்றோம், ஒரே காற்றையே சுவாசிக்கின்றோம், ஒரே இரத்தமே ஓடுகின்றது. ஓரே மண்ணிலே வாழ்கின்றோம்,  ஒரே மண்ணிலேதான் அடங்கப்படவும் போகின்றோம். அப்படியென்றால் ஏன் இனப்பாகுபாடு.? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்த நாட்டில் வாழும் மக்கள் தமிழ் சிங்கள மொழிகளைக் கட்டாயம் கற்பிக்க சட்டம் கொண்டுவர வேண்டும்.

பரஸ்பர மத கலாச்சாரங்களை அறிந்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.
எந்த இனமும் நாட்டின் எந்தப் பகுதியிலும் காணி வாங்கவோ விற்கவோ குடியிருந்து வாழவோ இருக்கும் தடைகளை நீக்க வேண்டும்.
ஒரு இனத்துக்கான கிராமம், ஒரு இனத்துக்கான பாடசாலை, ஒரு இனத்துக்கான நிருவாக அலுவலகம் என்ற முறைமைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும்.
பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பதவி போன்ற பெண்களும் செய்யக் கூடிய தொழில்களுக்கு பெ.ண்களுக்கு இருக்கும் தடைகளை நீக்க வேண்டும்.” என்றும் அவர் ஆதங்கப்பட்டார்.

SHARE

Author: verified_user

0 Comments: