விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோததர் ஆகியோருக்கு பிணை கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை திங்களன்று (ஓகஸ்ட் 29, 2016) மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வி.சந்திரமணி முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரை தலா 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், இவ்விரு சரீரப் பிணைகளிலும் செல்ல நீதிபதி அனுமதித்தார்.
அத்துடன், பிணை நிபந்தனைகளாக அடுத்து வரும் 6 மாதங்களுக்கு வாரத்தில் திங்கள் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களும் காலை 9 மணிக்கும் நண்பகல் 12 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் காத்தான்குடி பொலிஸ் நிலையம் சென்று கையொப்பமிட வேண்டும்.
இதற்கும் மேலதிகமாக இவர்கள் வழக்கு விசாரணை முடியும் வரை நாட்டைக் கடந்து வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாதென்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் திகதி மட்டக்களப்பு, ஆரையம்பதிப் பகுதியில் இரண்டு பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் அரசாங்கப் பாடசாலை ஒன்றின் ஆசிரியரான கிருஸ்ணபிள்ளை மனோகரன் மற்றும் பெண் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் பூ. ஹரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு கடந்த 10 மாதங்களுக்கு மேலாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
கடைசியாக இவர்களின் பிணை மனு கோரிய வழக்கு ஓகஸ்ட் 02ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஓகஸ்ட் 29ஆம் திகதிக்கு வழக்;கு விசாரiணை பிற்போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment