10 Aug 2016

மட்டக்களப்பு - பதுளை வீதிப் பகுதியில் கடந்த 33 வருடங்களாக வாழ்ந்து வரும் எமக்கு வசிக்க இன்னும் ஒரு வீடு கட்டித் தரப்படவில்லை

SHARE
ஊவா மாகாணத்தில் இருந்து 1983 ஆடிக் கலவரத்தின் போது அடித்து விரட்டப்பட்டு சகலதையும் இழந்து பாதிக்கப்பட்டு அகதிகளாக வந்து மட்டக்களப்பு - பதுளை வீதிப் பகுதியில் கடந்த 33 வருடங்களாக வாழ்ந்து வரும் எமக்கு வசிக்க இன்னும் ஒரு வீடு கட்டித் தரப்படவில்லை என
செங்கலடி மரப்பாலம் கிராமத்தில் வசிக்கும் இராமசுந்தரம் மகேஸ்வரி தெரிவித்தார்.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அமர்வு வாழைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது அங்கு கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது 1983 ஜுலை கலவரத்தில் இடம்பெயர்ந்து மட்டக்களப்பு பதுளை வீதிப் பகுதியில் வசிக்கும் ஊவா பெருந்தோட்டப் பகுதி  மக்கள்   செயலணிக்குழுவின் முன் ஆஜராகி தமது குறைபாடுகளை வெளியிட்டனர்.

தொடர்ந்து அங்கு தனது அபிலாஷைகளை வெளியிட்ட மகேஸ்வரி!

ஊவா  பரணகம, வெலிமட பகுதியில் நாங்கள் சுமுகமாக வாழ்ந்து வரும் போதுதான் 1983 ஜுலைக் கலகம் ஏற்பட்டது.

நாங்கள் லயன் காம்பிராக்களில் வாழவில்லை. எங்களுக்கு 5 ஏக்கர் சொந்தக் காணிகள் இருந்தன. நாம் விரட்டியடிக்கப்படும் போது எமது காணி, வீடு, சொத்துக்கள் அத்தனையையும் நாங்கள் அங்கிருந்த மிகவும் நம்பிக்கைக்குரியவர் என நம்பிய ஒரு பௌத்த பிக்குவிடம் ஒப்படைத்து விட்டுத்தான் வந்தோம்.

ஆனால் பின்னாட்களில் எமது அத்தனை சொத்துக்களும் அந்த பௌத்த பிக்குவால் அபகரிக்கப்பட்டிருப்பதோடு நாம் அங்கு நிலைமை சுமுகமாகியதும் திரும்பிச் செல்ல முற்பட்டபோது புலிஎன முத்திரை குத்தப்பட்டோம்.

எங்களுக்கு அங்கும் இழப்பீடு கிடைக்கவில்லை. இங்கும் புனர்வாழ்வு கிடைக்கவில்லை என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: