ஆயித்தியமலை விவசாயிகள் ஏமாற்றப்பட்டு விட்டார்கள்.
உன்னிச்சை குளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவ
குழுத்தலைவர் கே.யோகவேள்ஜனாதிபதி ஆரம்பித்து வைத்த உரமானியத் திட்டத்தின் நன்மைகள் கிடைக்கப்பெறாது ஆயித்தியமலை விவசாயிகள் விவசாய அதிகாரிகளால் ஏமாற்றப்பட்டு விட்டதாக உன்னிச்சை குளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவ குழுத்தலைவர் கே.யோகவேள் தெரிவித்தார்.
உரமானியம் கிடைக்கப்பெறாது பாதிக்கப்பட்ட ஆயித்தியமலை கமநல அபிவிருத்தி நிலைய நிருவாகத்தின் கீழ் உள்ள விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜுலை 17, 2016) ஆயித்தியமலையில் முகாமைத்துவ குழுத்தலைவர் கே.யோகவேள் தலைமையில் சந்திப்பொன்றை நடத்தினர்.
இச்சந்திப்பின்போது, ஆயித்தியமலை பிரதேச பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமது கண்டனத்தையும் கவலையையும் வெளியிட்டதாக யோகவேள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி மேலும் குறிப்பிட்ட யோகவேள், ஆயித்தியமலை விவசாய அபிவிருத்தி அலுவலகத்தில் கடமையாற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரியொருவர் விட்ட நிருவாகத் தவறு காரணமாகவே அந்தப் பகுதியிலுள்ள சுமார் 1000 விவசாயிகளுக்கு உரமானிய நன்மைகள் இதுவரைக் கிடைக்கப் பெறாமற் போயுள்ளது.
மேலும், குறித்த அதிகாரி தினமும் அலுவலக நேரத்திற்கு கடமைக்கு வருவதில்லை. அதேவேளை இப்பகுதியிலுள்ள விவசாயிகள் தமது அலுவல்களை முடிப்பதற்கு குறித்த அலுவலகத்திற்குச் சென்றால் அங்குள்ள அதிகாரிகளால் விவசாயிகள் வரவேற்கப்படாதது ஒருபுறமிருக்க விவசாயிகள் விரட்டப்படுகின்றார்கள்.
எனவே, இது குறித்து விவசாயத் திணைக்கள உயரதிகாரிகளுடன் நாம் பேசவுள்ளோம். உரமானியம் பெற்றுத் தருவது உள்ளிட்ட எமது கோரிக்கைகள் நிராகரிக்கப்படுமாக இருந்தால் இப்பிரதேச விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராக இருக்கிறார்கள்” என்றார்.
உன்னிச்சைக் குள நீர்ப்பாசனத்தை நம்பி நெற்செய்கையில் ஈடுபட்ட ஆயித்தியமலை கமநல அபிவிருத்தி அலுவலகத்தின் கீழ் நிருவகிக்கப்படும் சுமார் 2000 ஆயிரம் ஏக்கர் நெற் காணிகளுக்கு இதுவரை உர மானியம் கிடைக்கப்பபெறவில்லை.
விதைப்புக்கு முன்னரே வழங்கப்பட்டிருக்க வேண்டி அறுவடை முடியப்போகும் தற்போதைய நிலையில் இந்த உரமானியம் இனி தமக்குக் கிடைக்காமற் போகுமோ என்றும் விவசாயிகள் கவலையோடு உள்ளார்கள். இதுவரை உரமானியம் கிடைக்காத விவசாயிகளுக்கான உரமானியங்கள் ஜுலை 15 ஆம் திகதிக்கிடையில் வழங்கப்பட்டு விடும் என்று மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நடராஜா சிவலிங்கம் கடந்த ஜுன் 06, 2016 அன்று தெரிவித்திருந்தார். ஆயினும், அவர் சொன்ன காலக்கெடுவும் தற்போது முடிவடைந்து விட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அரசாங்கம் ஒரு ஏக்கர் நெல் விவசாயத்திற்கு 5000 ரூபாவை உரமானியமாக வழங்குகின்றது. ஆகக் கூடியது ஒரு விவசாயிக்கு ஐந்து ஏக்கருக்கே உரமானியம் கிடைக்கும்.
0 Comments:
Post a Comment