வடக்கு கிழக்கு இளையோரும் தேசிய விளையாட்டுக்களில் பங்குபற்றி பிரகாசிக்க தற்போது அருமையான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஞாயிறன்று மாலை (ஜுலை 10, 2016) மட்டக்களப்பு வெபர் விளையாட்டுக் கட்டிடத் தொகுதியை திறப்பு விழாவில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், விளையாட்டுக்கு மட்டுமல்ல தேசிய நல்லிணக்கத்திற்கும் தற்போது கிடைத்துள்ள வாய்ப்பு எதிர்காலத்தில் இளையோரை ஒன்றிணைக்க பெருந்துணை புரியும்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள விளையாட்டு வீரர்களினதும் பாடசாலை மாணவர்களினதும் விளையாட்டுத் திறமைகளை அபிவிருத்தி செய்வதற்காக எமது அமைச்சு ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் அமைச்சின் மொத்த ஒதுக்கீட்டில் 36 வீத நிதியை இந்த ஆண்டு ஒதுக்கியுள்ளது. இது ஒரு வரப்பிரசாதமாகும்.
மேலும், ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைவாக இந்த ஆண்டின் தேசிய விளையாட்டு விழாவை செப்ரெம்பெர் மாதம் 27 ஆம் திகதியிலிருந்து ஒக்ரோபெர் 2ஆம் திகதிவரை வடமாகாணத்தில் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த தேசிய விளையாட்டு நிகழ்வுகளை நாம் வடக்குக்கு கொண்டு செல்வதற்குக் காரணம் வருடக்கணக்காக விளையாட்டு மறக்கடிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள விளையாட்டு வீரர்களின் திறமைகளை வெளியுலகத்திற்குக் கொண்டுவருவதற்கேயாகும். விளையாட்டிலும் திறமைகளை வெளிப்படுத்துவதிலும் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதிலும் இனமத மொழி பிரதேச வேறுபாடுகள் இருக்க முடியாது.
விஷேடமாக வடக்கு கிழக்கில் கால்பந்து விளையாட்டில் பிரகாசிக்கக் கூடிய ஆற்றலுள்ள விளையாட்டு வீர வீராங்கனைகள் இருக்கிறார்கள். அவர்களது திறமைகளளையும் இன்னும் வேறுபல ஆற்றலுள்ள விளையாட்டு வீரர்களின் திறமைகளையும் நாம் வெளிக்கொண்டுவருவதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளோம்.
விளையாட்டின் மூலமும் தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.” என்றார்.
0 Comments:
Post a Comment