கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினரால் அளிக்கை செய்யப்பட்ட பாரம்பரிய அரங்க விழா மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் போது காண்பிக்கப்பட்டது.
கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறைத் தலைவர் கலாநிதி வ. இன்பமோகன் தலைமை வகித்த இந்நிகழ்வு செவ்வாய்க்கிழமை (26.07.2016) மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில் நுண்கலைத்துறையினரால் அமைக்கப்பட்ட பாரம்பரிய கூத்துக்களரியில் இடம்பெற்றது.
நுண்கலைத் துறையினரின் மாணவர் மையக் கலைத்திட்டம் (Outcome Base Curriculum) சார்ந்த கல்விச் செயற்பாட்டின் ஒரு பகுதியாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.
வகுப்பறைக் கற்பித்தலின் மூலம் பெறப்பட்ட கல்வியை பிரயோகித்துப் பார்க்கும் இடமாகவும், சமூகத்துடன் இணைந்து கலைச் செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் மாணவர்கள் அறிவையும் திறன்களையும் சமூகத்திற்கு வழங்கியும் சமூகத்திலிருந்து அவற்றைப் பெற்றும் இரு வழி கற்றல் செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுக்கும் ஒரு மையமாகவும் மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தில் பாரம்பரிய அரங்கவிழாவும் கண்காட்சியும் அமைந்திருப்பதாக கலாநிதி மோகன் தெரிவித்தார்.
இன்றைய வாழ்வியல் சூழலில் மனிதன் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்கவேண்டியுள்ளது. வகுப்பறைக் கல்வியினால் மாத்திரம் ஆரோக்கியமானதொரு எதிர்கால சமூகத்தை உருவாக்க முடியாது எனக் கருதிய நுண்கலைத் துறையினர் இவ்வாறான பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை அமைத்து கடந்த ஆறு ஆண்டுகளாக செயற்பட்டு வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.
இவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விதந்துரைக்கும் மாணவர்மையக் கல்வியின் பலாபலன்களை அடைவதற்கும் பல்வேறு வழிகளில் பங்காற்றுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment