31 Jul 2016

சமாந்தரமான கிராம அபிவிருத்தி திட்டத்தெரிவில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் கிராமங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. - இரா.துரைரெட்ணம் மாகாணசபை உறுப்பினர்.

SHARE
கிழக்கு மாகாணசபையின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் சமாந்தரமான கிராம அபிவிருத்தி திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டம் விகிதாசார முறையில்
தெரிவு செய்யப்படாமையால் தமிழ் கிராமங்களுக்கு அநீதியிழைக்கப்பட்டுள்ளதாக  கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர் இரா.துரைரெட்ணம் குறிப்பிட்டார்.

மாகாணசபை உறுப்பினர் இது தொடர்பில் ஞாயிற்றுக் கிழமை (31) மேலும் தெரிவிக்கையில் மட்டக்களப்பு

மாவட்டத்திற்கு சமாந்தரமான கிராம அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி விகிதாசாரமுறையில் ஓதுக்கப்படவில்லை  மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை 76 வீதமான தமிழர்களும் 23 வீதமான முஸ்லிங்களும் ஒருவீதமான ஏனைய இனத்தவர்களும் வாழ்கின்ற நிலையில் இத்திட்டத்தில் 4 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதில்  மூன்று தமிழ் கிராமங்களும் ஒரு முஸ்லிம் கிராமமும் தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் இரண்டு தமிழ் கிராமங்களும் இரண்டு முஸ்லிம் கிராமங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக தமிழ் கிராமங்களுக்கு அநீதி  இழைக்கப்பட்டிருக்கின்றது

குறித்த திட்டத்திற்காக ஒரு கிராமத்திற்கு 90 இலட்சம் ஒதுக்கப்படவுள்ள நிலையில் ஒரு தமிழ் கிராமம் தெரிவு செய்யப்படாமையால் 90 இலட்சம் ரூபாய் இல்லாமல் செல்வது வேதனையான விடயமாகும். இதுதொடர்பில் காரணம் கேட்கின்றபோது மாறி மாறி பதில்களை அளிக்கின்றனரே தவிர தீர்க்கமான எந்தப்பதில்களையும் கூறவில்லை. இவ்வாறான செயற்பாடுகள் நாகரீகமானதாக அமையவில்லை என்பதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களை கிழக்கு மாகாணசபை புறக்கணிப்பது என்பது நீண்டகாலமாக இடம்பெறும் விடயமாகும். இது சீராக்கப்பட வேண்டிய பொறுப்பு தற்போது நாட்டை ஆளுகின்ற ஆளும் தரப்புக்கு உள்ளது. இது தொடர்பாக 3 கிராமங்களை தெரிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகிரங்கவேண்டுகோள் விடுகின்றேன் என்றார்.



SHARE

Author: verified_user

0 Comments: