13 Jul 2016

தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் முதலில் தமிழர்களிடமிருந்து காப்பாற்றுங்கள்

SHARE
கம்பபாரதி சொல்லியிருக்கிறார் தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் முதலில் தமிழர்களிடமிருந்து காப்பாற்றுங்கள். இதற்கு சான்றாக ஜனாதிபதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஞாயிற்றுக் கிழமை (10) வருகை தந்த போது ஆங்கில மொழியிலும், சிங்கள மொழியிலும் நிகழ்வு நடைபெற்றன. தமிழ்மொழியில் நிகழ்வு நடைபெறவில்லை. நிகழ்வுக்கு அழைத்தவர்கள், நிகழ்வினை செய்தவர்கள் தமிழர்கள். இவ்விடயம் வெட்கமாக,
வேதனையாக  இருக்கின்றது. பெரும்பான்மையான இனத்து ஜனாதிபதி வந்திருக்கின்றார் என்றால் நாங்கள் தமிழில் பேச வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் .வியாழேந்திரன் குறிப்பிட்டார்.

மகிழடித்தீவு மகிழை இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வு திங்கட் கிழமை (11) மாலை இடம்பெற்ற போது இதில் பிரதம அதிதியாக கலந்து உரையாற்றுகையிலே நாடாளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார்.

அவர்உறுப்பினர் தொடர்ந்தும் அங்கு உரை நிகழ்த்துகையில்…. 

பாசிக்குடாவில் தமிழர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கின்றார். மட்டக்களப்பில் காணிகள் அபகரிக்கப்படுகின்றது  இதற்கு காரணம் எங்களது தமிழ் அதிகாரிகள். ஒவ்வொரு அரசியல் வாதிகளும் ஒவ்வொரு தனிமனிதனும் இனப்பற்றோடும், மொழிப்பற்றோடும் இருக்க வேண்டும்.

இன்று மட்டக்களப்பிலே இருக்கின்ற தமிழ் அதிகாரிகள் தமிழர்கள் வாழ்கின்ற இடத்திலே சிங்களவர்களை குடி அமர்வதற்கு துணை போகின்றார்கள். பணத்திற்காக தங்களது சுயநலத்திற்காக இதனை செய்கின்றார்கள். புதுக்குடிப்பிருப்பு பகுதியிலே பல வருடமாக தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் தற்போது எங்கையோ இருந்த உறுதிகளை கொண்டு வந்து இது நாங்கள் வாழ்ந்த இடம் என்று கூறி பொலிசாரைக் கொண்டு தமிழர்களை சகோதர இனத்தவர்கள் விரட்டுகின்றார்கள். இதற்கு யார் காரணம் என்று பார்த்தால் இந்த மாவட்டத்திலே இருக்கின்ற தமிழ் அதிகாரிகள். தங்களது பதவிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக தமிழ் அதிகாரிகள் அரசோடு இருக்கின்ற அமைச்சர்களோடு இணைந்து செயற்படுவதை அறிகின்றோம். தங்களையும், தங்களது குடும்பத்தையும் வாழ வைப்பதற்காக இந்த மாவட்டத்திலே உள்ள அதிகாரிகள் தமிழர்களது காணிகளை கூட்டிக்கொடுக்கின்ற செயற்பாடுகளை அறிகின்றோம். மட்டக்களப்பில் உள்ள பல நிலங்களுக்கு முறையற்ற உறுதிகளை உருவாக்கி காணிகளை விற்கின்றனர்

தமிழ் நாட்டிற்கு சென்றிருந்த போது சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. காரணம் நான் மட்டக்களப்பைச் சேர்ந்தவன் மட்டக்களப்பு கிழக்கில் உள்ளது. நான் தமிழ் இனத்தினைச் சேர்ந்தவன் என்று கூறுவதற்கு எனக்கு பல மணித்தியாலங்கள் தேவைப்பட்டது. நான் சென்ற போது நீங்கள் வடக்கு மாகாணமா, யாழ்ப்பாணமா? என்று கேட்டார்கள். இல்லை, நான் கிழக்கு மாகாணம் என்று கூறிய போது கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் இருக்கின்றனரா?  அவர்கள் போராட்டத்தில் பங்குபற்றியவர்களா? என்று கேட்டனர். ஆம் என்றபோது இது எங்களுக்கு தெரியாது நாங்கள் வடக்கு மாகாணத்தில்தான் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்று எண்ணி அங்குதான் உதவிகளை செய்கின்றோம் என்றனர்.
தமிழர்களது  போராட்டம் வலிமையான போராட்டமாக இருந்தது. உலக அரங்கே திரும்பிப்பார்த்தது. போராட்ட காலங்களிலே எங்களுக்குள் இடம்பெற்றதான ஒற்றுமையீனம், கருத்து முரண்பாடுகள் நான் பெரியவனா? நீ பெரியவனா? என்ற விடயங்கள் தேவையற்ற விசமத்தனங்கள் எம்மை எங்கோ கொண்டு நிறுத்தியது. 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலிலே தமிழர்களின் போராட்டம் மௌனிக்கப்பட்ட போது இந்த நாட்டில் தமிழர்கள் தலைநிமிர்ந்து போராடவேண்டுமாக இருந்தால் அரசியல் ரீதியாகத்தான் போராட வேண்டும் என்ற நிலைக்கு தமிழர்களின் போராட்டம் தள்ளப்பட்டது

அரசியல் ரீதியாக போராட்டத்தை முன்னெடுக்கும் போது நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பும் தேர்தலுக்கு பின்பும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு அவர் பெரியவரா? இவர் பெரியவரா? என்ற கருத்துக்களை பேசிக்கொண்டு எல்லாவற்றிலும் பிந்தி செல்கின்ற, பின்னோக்கி செல்லுகின்ற சமூகமாகத்தான் இருக்கின்றோம். 1949ம் ஆண்டிற்கு பின்வந்த அரசாங்கங்கள் எம்மை மாறி மாறி ஏமாற்றிக்கொண்டுதான் வந்திருக்கின்றது.


இந்த அரசு ஒருஅரசியல் தீர்வு திட்டத்தை முன்வைத்திருக்கின்றது. 100வீதம் இதன் மூலம் தீர்வு கிடைக்கும் என்பதை நான் நம்பவில்லை. இந்த அரசு நாங்கள் கேட்பதை தர வேண்டும். ஆனால் சர்வதேச விசாரணை வேண்டுமென்றும், சர்வதேச நீதிபதிகள் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறியும் இந்த நாட்டு ஜனாதிபதிகூட சர்வதேச நீதிபதிகளுக்கோ சர்வதேச விசாரணைகளுக்கோ நானிருக்கும் வரை இடமளிக்கப்போவதில்லை எனக்கூறுகின்றார் என்றார்.
SHARE

Author: verified_user

0 Comments: