20 Jul 2016

சமகாலத் தேவையுணர்ந்து செயற்படுவதே கனவான் அரசியல்வாதிகளின் சிறந்த விழுமியங்களாக இருக்க வேண்டும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி

SHARE
சமகாலத் தேவையுணர்ந்து செயற்படுவதே கனவான் அரசியல்வாதிகளின் சிறந்த விழுமியங்களாக இருக்க வேண்டும். அவை சரித்திரத்திலும் அழியாத இடத்தைப் பெறும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் க. யோவேள் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் அமைக்கப்பட்டு வந்த மாபெரும் நூலகத்தின் நிருமாணப் பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டிருப்பது பற்றி அவர் புதன்கிழமை (ஜுலை 20, 2016) ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டார்.

அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது,
பிரதேச அரசியல்வாதிகள் அபிவிருத்திப் பணிகளைத் திட்டமிடும்போது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயற்படக் கூடாது.

2012 ஆம் ஆண்டு சுமார் 250 மில்லியன் ‪ரூபாய் செலவில் அமைக்கப்படுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு 110 மில்லியன் ரூபாய் செலவில் மட்டக்களப்பின் மாபெரிய நூலகத்துக்கான கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வந்தன.

அதன் பின்னர் ஏற்பட்ட மாகாண சபை, மற்றும் மத்திய அரசு ஆட்சி மாற்றம் காரணமாக நூலகத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் மிகுதியை பெற்றுக் கொள்ள முடியாமற்போனதால் நூலகக் கட்டுமானப் பணிகள் கடந்த 2 வருடகாலமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அதன் பின்னர் இந்தக் கட்டிடத்தின் அவல நிலைமையினை மட்டக்களப்பு மாவட்டத்தின் எந்தவொரு இணக்கப்பட்டு அரசியல்வாதிகளும் இதுவரை சீர் தூக்கிப் பார்த்ததாகத் தெரியவில்லை.

நவீன உலகமயமாகும் தொடர்பு சாதன வளர்ச்சிக்கேற்ப இந்த நூலகம் மாணவர்களினதும் ஆய்வாளர்களினதும் அறிவுத் தேடலுக்கு அச்சாணியாக அமையக் கூடிய அறிவுக் கருவூலமாக இதனை உருவாக்குவதற்கு அனைவரும் சிரத்தை எடுக்க வேண்டும்.

586601 சனத்தொகையைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் 128154 மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தம் 64 சாதாரண நூலகங்கள் உள்ளன.

ஆனால், இந்த நூலகங்கள் எவையும் நவீன நூலக வசதிகளைக் கொண்டமைந்ததாக இல்லை.

இந்த பாரம்பரிய நூலகங்களில் நவீன மற்றும் போதிய வசதிகள் இல்லாத காரணத்தினால் குறைந்தளவிலான வாசகர்களே இந்த நூலகங்களைப் பயன்படுத்துகின்றனர்.

ஒட்டு மொத்த சனத்தொகையில் சுமார் 47877 பேர் மாத்திரமே நூலகங்களில் அங்கத்தவர்களாக உள்ளார்கள்.

எனவே, சுமார் 120 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்டு அரைகுறை நிருமாண வேலைகளோடு சிதைவடைந்து காட்சி தரும் மட்டக்களப்பு மாநகரின் மாபெரிய நூலக நிருமாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு அரசியல்வாதிகளும், சமூகநல விரும்பிகளும் கல்வியலாளர்களும் முன்வரவேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.







SHARE

Author: verified_user

0 Comments: