13 Jul 2016

சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பசுமாடுகளுடன் இருவர் கைது

SHARE
சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட 4 பசுமாடுகளுடன் புதன்கிழமை (ஜுலை 13, 2016) பிற்பகல் ஏறாவூர் நகரில் வைத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரியும்  சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. தினேஸ் கருணானாயகவின் வழிகாட்டலுக்கமைவாக மட்டக்களப்பு போதையொழிப்பு மற்றும் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த உபபொலிஸ் பரிசோதகர் ஜே. அலோசியஸ் தலைமையிலான பொலிஸ் அணியினர் மறைந்திருந்து திடீர் சோதனை மேற்கொண்டபோது  ஏறாவூர் 4ஆம் குறிச்சிப் பகுதியில் வைத்து இந்த மாடுகளும் அவற்றை கடத்திவந்த 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும், மாடுகளைக் களவாக ஏற்றிவருவதற்காகப் பயன்படுத்தப்பட்ட வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர்கள் இந்த மாடுகளை இறைச்சிக்காக அறுக்கும் நோக்குடன் அனுமதிப் பத்திரமின்றி கடத்தி வந்துள்ளனர் என்றும் அந்த மாடுகள் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற நோய்வாய்ப்பட்ட மாடுகள் என்றும் தெரிவித்த பொலிஸார் சந்தேக நபர்கள் மீது சட்டவிரோதமாக மாடுகள் கடத்தலில் ஈடுபட்டதற்காகவும், மிருகவதைக் குற்றச் சாட்டின் கீழும் நடவடிக்கை எடுக்கவிருப்பதாகத் தெரிவித்தனர்.

கைதான இருவரும் முறையே 33 மற்றும் 22 வயதுடைய ஏறாவூர் நகர் மற்றும் காயான்குடா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.






SHARE

Author: verified_user

0 Comments: