மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிவேம்பு கிராமத்தில் வைத்து சனிக்கிழமை (ஜுலை 30, 2016) வெள்ளைவேனில் வந்தவர்களால் கடத்தப்பட்ட 11 வயதுச் சிறுவன் மட்டக்களப்பு பதுளை வீதிப் பிரதேசம் கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள காட்டோரத்திலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, சித்தாண்டி மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 6 இல் கற்கும் மாவடிவேம்புக் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சன் விதுஷன் (வயது 11) என்ற மாணவன் பாடசாலையில் இடம்பெற்ற பிரத்தியேக வகுப்புக்குச் சென்று வகுப்பு முடிந்ததும் கொழும்பு – மட்டக்களப்பு பிரதான நெடுஞ்சாலை வழியாக காலை 11 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது அவ்வீதியால் வெள்ளைவேனில் வந்தவர்கள் சிறுவனை அலாக்காக வேனுக்குள் தூக்கிப்போட்டுக் கொண்டு வேகமாக விரைந்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றி அறிந்து பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டதும் தேடுதல் ஆரம்பிக்கப்பட்டது.
சில மணி நேரங்களின் பின்னர் சிறுவன் மட்டக்களப்பு-பதுளை வீதிப் பகுதி கரடியனாறு பகுதியில் வீதியருகில் உள்ள காட்டோரத்தில் சிறுவன் வீசியெறியப்பட்டுள்ளான்.
அழுது கொண்டு நின்ற சிறுவனை மீட்டெடுத்தவர்கள் அருகிலுள்ள கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
சிறுவன் உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு மற்றும் ஏறாவூர் பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment