28 Jul 2016

மருதமுனையில் மருதமுனையில் “மரம் நடுவோம் பசுமை காண்போம்” - வேலைத்திட்டம் ஆரம்பம்.

SHARE
(டிலா )

மருதமுனையில் “மரம் நடுவோம் பசுமை காண்போம்” எனும் செயற்திட்டத்திற்கமைவாக மருதமுனையில் 5000 மரக்கண்றுகள் நடும் செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. அல்-மருதமுனை சஞ்சிகையின் ஏற்பாட்டில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் எம்.சி.எம். அப்துல் காதர் தெரிவித்தார்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (31.07.2016) காலை 8.30 மணிக்கு மருதமுனை  அல்-ஹிக்மா வித்தியாலயத்தில் கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையத்தின் பிரதம ஆலோசகரும், நீதிபதியுமான அல்-ஹாஜ் ரி.எல். அப்துல் மனாப் தலைமையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

1978ம் ஆண்டு இடம்பெற்ற சூராவளி 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தம்  காரணமாக மருதமுனையின் இயற்கைகள் பெரிதும் அழிவுக்குட்படுத்தப்பட்டுள்ளது. புதிய வீட்டுத்திட்டங்களின் நிர்மாணமும் இங்கு இயற்கையான பசுமையில் பெரும் தாக்கத்தினை செலுத்தியுள்ளன. இவைகளினை கருத்திற்கொண்டு இயற்கையை மீண்டும் கட்டி எழுப்பும் உன்னத நோக்குடன் “பசுமையான மருதமுனை” எனும் இலக்கை நோக்கி இத்திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

இத்திட்டத்திற்கு அமைவாக முதற்கட்டமாக மருதமுனையிலுள்ள அனைத்துப் பாடசாலைகள், பள்ளிவாசல்கள், மதஸ்தாபனங்கள், அரச நிறுவனங்கள், கடற்கரை, புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டங்கள் (பிரானஸ் சிற்றி, 65 மீற்றர்,இஸ்லாமிக் றிலீப் வீட்டுத்திட்டம்,) என்பனவற்றில் இந்த மரம் நடுகை இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கட்சி, அரசியல் நோக்கங்கள் எதுவுமின்றி மருதமுனையின் எதிர்கால நன்மை கருதி செயற்படுத்தப்படும் இச் செயற்திட்டத்தில் அனைவரும் இணைந்து பசுமையான மருதமுனையை காண்பதற்கு முன்வருமாறு 18 வருட காலமாக சேவையாற்றி வரும் அல்-மருதமுனை ஆசிரியர் பீடம் அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: