31 Jul 2016

கிழக்கு முதலமைச்சரால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதாரத்துறை அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு

SHARE
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டினால் செவ்வாய்க்கிழமை 02.08.2016 மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு  சுகாதாரத்துறை அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் செயலகம் அறிவித்துள்ளது.

ஓகஸ்ட் மாதம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ள  முதலாவது அபிவிருத்தித் திட்டமாக மட்டக்களப்பு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் தங்கும் விடுதி மற்றும் இரத்த வங்கிக்கான கட்டிடத் தொகுதி ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது.

அத்துடன் சில வீதிகளைச் செப்பனிடுவதற்கான வேலைகளும் காத்தான்குடியில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

காத்தான்குடி வைத்தியசாலையின் பல்வேறு  அபிவிருத்தித் திட்டங்களுக்காக  முதலமைச்சரினால் 53.1 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஏறாவூர் ஆயர்வேத வைத்தியசாலையில்; சுமார் 90 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் பெண் நோயாளர்கள் தங்கும் விடுதி அமைப்பதற்கான அடிக்கல் முதலமைச்சரால் நாட்டி வைக்கப்படவுள்ளது.

மேலும், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் 1 கோடி 30 இலட்சம் ரூபாய் செலவில் மகப்பேற்று விடுதியை நிறைவு செய்வதற்கான ஆரம்பிப்பு வேலைகளும் இடம்பெறவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தொகுதியில் மீராவோடை மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காக  சுமார் 6 மில்லியன் ரூபாய் நிதி முதலமைச்சரினால் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காக 43 மில்லியன் ரூபாய் முதலமைச்சரால் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் அபிவிருத்திப் பணிகளின் ஆரம்பமும் செவ்வாய்க்கிழமை சம்பிரதாயபூர்வமாக இடம்பெறும் என்று முதலமைச்சரின் இணைப்பாளர் செய்னுலாப்தீன் ஹிதாயத்துல்லாஹ் தெரிவித்தார்.

சுகாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதாரத்தையும்  சிறப்பாகப் பேணுவதே நோக்கம் என்று முதலமைச்சர் செயலகம் அறிவித்துள்ளது. 

SHARE

Author: verified_user

0 Comments: