13 Jul 2016

அஞ்சல் சேவை மக்களின் உணர்வுகளோடும், உறவுகளோடும் வாழ்க்கையோடும் பின்னிப்பிணைந்தது - ஜெயனந்தி

SHARE
அஞ்சல் சேவை மக்களின் உணர்வுகளோடும், உறவுகளோடும் வாழ்க்கையோடும் பின்னிப்பிணைந்தது என கிழக்கு மாகாண பிரதித் தபால் மா அதிபதி ஜெயனந்தி திருச்செல்வம் தெரிவித்தார்.
இலங்கை தபால் சேவைக்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட அலுவலர்களுக்கான இருவார கால கடமை அறிமுக பயிற்சி நெறி மட்டக்களப்பு அஞ்சல் பயிற்சி நிறுவகத்தில் பிரதம போதனாசிரியர் பி. நரேந்திரன் தலைமையில் புதன்கிழமை (ஜுலை 13, 2016) காலை ஆரம்பமானது.
அலுவலக விடயதானங்கள், நிதிக் கையாளுகை, முகாமைத்துவமும் நிருவாகமும், வாடிக்கையாளர் சேவை, அஞ்சல் பரிவர்த்தனைகள், அஞ்சல் இயங்கு முறைகள் பற்றிய பயிற்சிகள் இடம்பெறுகின்றன.

இந்நிகழ்வில் கடமை அறிமுக உரையாற்றிய ஜெயனந்தி மேலும் கூறியதாவது, அஞ்சல் சேவை என்பது ஒவ்வொருவரினதும் சுக துக்கங்களிலும், பங்கெடுத்து நிற்பது. அது ஒரு காலத்தில் அனைவரும் அஞ்சல் சேவையாளர்களை வழிமேல் விழிவைத்துப் பார்த்துக் கொண்டிருந்த காலமிருந்தது.
ஒரு கடிதம், மணியோடர், தந்தி, நியமனக் கடிதம் தபால் காரர் மூலமாக நமது கையில் கிடைக்கும்போது நாம் உள்ளுர அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதனால் அது இன்றளவும் மக்களது வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்ததாக இருக்கின்றது.

ஒட்டு மொத்தத்தில் நமது வாழ்க்கையே ஒரு காலத்தில் அஞ்சல் சேவைக்குள்தான் அடங்கியிருந்தது.

மேலும், இலங்கையில் இன்றளவும் ஒரு சிறந்த நிருவாக சேவைக்கும் அர்ப்பணிப்புச் சேவைக்கும் முன்மாதிரியாகத் திகழ்வது என்றால் அது தபால் சேவையைத் தவிர வேறொன்றுமில்லை.

தினமும் வேலை மிகுதி வைக்காத ஒரேயொரு சிறந்த நிருவாக சேவையும் இந்த அஞ்சல் சேவைதான்.

இலங்கையின் ஒரு பாகத்தில் எங்கோ ஒரு மூலையில் கடமை புரியும் ஒரு ஒரு அஞ்சல் அலுவலர் மறுநாள் நாட்டின் எப்பாகத்திற்கும் சென்று மற்ற எந்த உத்தியோகத்தரிடமும் உதவியை நாடாமல் கடமையைச் செய்ய முடிகின்ற நிருவாக முறைமையும் இந்த தபால் சேவையில்தான் உண்டு. இது ஒரு சிறப்பான அம்சம்” என்றார்.

மட்டக்களப்பு அஞ்சல் பயிற்சி நிறுவகத்தில் 9 ஆண்கள் 13 பெண்கள் உட்பட 22 அலுவலர்கள் பயிற்சி பெறுகின்றராகள்.

இலங்கையில் மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலேயே தமிழ் மொழிமூலப் பயிற்சி நெறி இடம்பெறுகின்றது.

தமிழ் பேசும் சமூகங்களைச் சேர்ந்த 112 பேர் கடந்த 11 ஆம் திகதி  வழங்கப்பட்ட நிமனத்தைப் பெற்றுள்ளார்கள்.

நாடளாவிய ரீதியில் 374 அதிகாரிகள் புதிதாக அஞ்சல் சேவை அதிகாரிகளாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் 317 பேர் பெண்களாகும்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதித் தபால் மா அதிபதி ஜெயனந்தி திருச்செல்வம், கிழக்குப் பிராந்திய கணக்காளர் சந்திரகலா ஜெயந்திரா. பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் எஸ். ஜெகன், பிரதம போதனாசிரியர் பி. நரேந்திரன் மற்றும் போதனாசிரியர்களான கே. பாத்திமா ஹஸ்னா, கமலா சந்திரசேகரன், சிவானந்தி தேவதாஸ் ஆகியோரும் பயிலுநர்களான புதிய அலுவலர்களும் கலந்து கொண்டனர்.  

SHARE

Author: verified_user

0 Comments: