11 Jul 2016

ஜனாதிபதியின் பெயர் பொறித்த நினைவுக்கல்லை அடித்து நொறுக்கிய விகாராதிபதி

SHARE
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவுக் கல்லை பௌத்த பிக்கு ஒருவர் அடித்து நொறுக்கிய சம்பவமொன்று நேற்றை தினம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்து விமான நிலையம் மற்றும் வெபர் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர், தன்னுடைய விகாரைக்கும் வருமாறு அழைப்பு விடுத்தார்.
எனினும், அங்கு வருவதற்கு தனக்கு நேரமில்லை என்று ஜனாதிபதி தெரிவித்ததனால், ஆத்திரமடைந்த பௌத்த பிக்கு, தன்னுடைய விஹாரையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவுக்கல்லை, அடித்து நொறுக்கியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த விகாரையிலிருந்து ஜனாதிபதிக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் எரிக் வீரவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் விகாரைகளில் நடைபெறும் தான நிகழ்வுகளுக்கு ஜனாதிபதியை கலந்துக்கொள்ளுமாறு பல அழைப்புக்கள் வருவதாகவும், எனினும் நேரம் கிடைக்கின்ற போதே ஜனாதிபதி அவற்றில் கலந்துகொள்வதைப் பற்றி சிந்திப்பார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், மட்டக்களப்பிற்கு இரண்டு தடவைகள் வந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இந்து ஆலயங்களுக்கும், முஸ்லிம்களின் பள்ளிவாசல்களுக்கும் சென்று அந்த மக்களை திருப்திபடுத்தி வருகின்ற போதிலும், மங்களராம விகாரைக்கு வருவதை தவிர்த்துக்கொள்வதாகவும் அம்பிட்டியே சுமனரத்ன தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.
போர் இடம்பெற்ற காலப்பகுதியிலும், அதற்குப் பின்னரும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் மட்டக்களப்பில் இயங்கிவரும் மங்களாராம விகாரையை வந்து பார்க்க முடியாத ஒரு அரச தலைவரின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவுக்கல்லை எதற்காக தான் வைத்திருக்க வேண்டும் என்று கருதியாலேயே அடித்து நொறுக்கியதாகவும் சுமனரத்தன தேரர் கூறி தனது செயலை நியாயப்படுத்தியுள்ளார்.
அது மாத்திரமன்றி ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடுமையாகத் திட்டித் தீர்த்த அவர், மைத்திரிபால சிறிசேன பௌத்த சாசனத்தையும், சிங்கள பௌத்த மக்களையும் பாதுகாக்க தவறிவருவதாகவும் பாரதூரமான குற்றச்சாட்டொன்றையும் முன்வைத்துள்ளார்.



SHARE

Author: verified_user

0 Comments: