கிழக்கு மாகாண சபைக்கு முதலீட்டு அதிகார சபை அதிகாரம் வழங்கப்படுமாயின் பில்லியன் டொலர் முதலீடுகளை கிழக்குக்கு கொண்டு வந்து இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்க முடியும் என கிழக்கு
மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.
ஞாயிறன்று மாலை (ஜுலை 10, 2016) மட்டக்களப்பு வெபர் விளையாட்டுக் கட்டிடத் தொகுதியை திறப்பு விழாவில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர், மட்டக்களப்பு மாவட்டம் வறுமையிலும் முதலிடத்தில் இருந்தது.
இப்பொழுது அது மதுப்பாவனையில் மூன்றாமிடத்தில் உள்ளது.
இங்குள்ள இளையோர்கள் போதைப் பொருள் வர்த்தகர்களால் இலக்கு வைக்கப்பட்டுள்ளார்கள். அதனால், மதுப்பாவனைக்கும், போதை வஸ்துவுக்கும் மாணவர்களும் இளைஞர்களும் இலக்காக்கப்பட்டுள்ளதால் இந்த மாவட்டத்தின் கல்வி, பொருளாதார, சமூக விழுமியங்கள் சீரழியக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.
அளவுக்கதிகமான மதுபான சாலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படுகின்றன.
அதனால் வறுமையும் தாண்டவமாடுகிறது, வறுமையை ஒழிப்பதோடு இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பையும் வழங்கினால் பொருளாதார வளர்ச்சியை அடையலாம்.
வளங்கொழிக்கும் கிழக்கு மாகாணத்தில் ஏன் வறுமையும், வேலையில்லாப் பிரச்சினையும் தலைதூக்க வேண்டும்,? இந்த வறுமையை ஒழிப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் முதலீடுகளை அதிகரித்து வளங்களைப் பயன்படுத்தி உச்சப்பயனைப் பெறவேண்டும்.
கிழக்கு மாகாண சபைக்கு முதலீட்டு அதிகார சபை அமைக்க அதிகாரம் வழங்கப்படுமாயின் இலட்சக்கணக்கான தொழில்வாய்ப்புக்களை உருவாக்கக் கூடிய மில்லியன் டொலர் முதலீட்டைக் கொண்டு வர முடியும்.
இந்த வாய்ப்பை எமது மாகாண நிருவாகத்திற்கு தர வேண்டும்.
இதிலே ஜனாதிபதி கூடிய கரிசனை காட்ட வேண்டும்.
தற்போதுள்ள நடைமுறையின்படி ஒரு முதலீட்டாளர் தனது முதலீட்டைச் செய்து உற்பத்திகளைத் தொடங்குவதற்கு 17 இடங்களில் அனுமதி பெறவேண்டியுள்ளது.
இப்படி ஒரு முதலீட்டாளர் அலைய நேரிடுவதால் அவர் முதலீடு செய்யாமல் நாட்டை விட்டே அகன்று விடுகின்றார். அதனால் நாம் பொருளாதமார அபிவிருத்திக்கான முதலீடுகளை இழக்கின்றோம்.
இந்த நிலைமையை மறுசீரமைக்க வேண்டும்.
வேறு வறிய நாடுகள் முதலீட்டுக்கான தங்களது கதவுகளை இலேசாகத் திறந்து விட்டிருக்கின்றன.” என்றார்.
0 Comments:
Post a Comment