20 Jul 2016

நரிப்புல்தோட்ட மக்களின் நீண்டகால பயணக் கஷ்டத்தை நீக்க 65 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் ஸ்ரீநேசன் எம்.பி.தகவல்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல இடங்களில் புதிதாக பாலங்கள் அமைக்க வேண்டிய தேவை உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை என்றழைக்கப்படுகின்ற பிரதேசத்தில் அமைந்துள்ள பங்குடாவெளி –நரிப்புல் தோட்டத்தை இணைக்கும் பாலம் சுமார் 65 கோடி ரூபாய் (650 மில்லியன் ரூபாய்) செலவில் இவ்வாண்டு பெருமழை தொடங்க முன்னர் நிருமாணிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் செவ்வாய்க்கிழமை (ஜுலை 19, 2016) தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக நிருமாணிக்கப்படவுள்ள பாலங்கள் தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நெடுஞ்சாலைகள் அமைச்சு இதற்கான நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் வரும் நரிப்புல்தோட்ட கிராம மக்கள் நீண்ட காலமாக போக்குவரத்துச் செய்வதில் அனுபவித்து வரும் துயரங்கள் பற்றி தான் நாடாளுமன்றில் உரையாற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த மக்கள் பாலம் இல்லாததால் போக்குவரத்துச் செய்ய அனுபவிக்கும் சிரமங்களை தான் நேரில் சென்று பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார்.

பாதுகாப்பற்ற நரிப்புல் தோட்டம்-பங்குடாவெளி வாவிப் பகுதியை தோணியில் கடக்கும்போது கடந்த காலங்களில் பலர் வாவியில் மூழ்கி உயிரிழந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பால நிருமாணப் பணிகள் நெடுஞ்சாலை அமைச்சினால் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.‪

மேலும், கிண்ணையடி – பிரம்படித்தீவை இணைக்கும் பாலம், சந்திவெளி –திகிலிவட்டையை இணைக்கும் பாலம், மற்றும் றாணமடு – மாலையர்கட்டை இணைக்கும் பாலம் ஆகியவற்றை அடுத்தடுத்து ஆரம்பிக் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல வாக்குறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த 4 பாலங்களையும் நிருமாணிப்பதற்கு 2820 மில்லியன்  (282 கோடி ரூபா) நிதி செலவாகும் என நெடுஞ்சாலைகள் அமைச்சின் பொறியியலாளர்களால் தற்காலிக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இவற்றுள், றாணமடு பாலத்திற்கு 120 மில்லியன் ரூபாவும், சந்திவெளிப் பாலத்திற்கு 1200 மில்லியன் ரூபாவும், கிண்ணையடிப் பாலத்திற்கு 850 மில்லியன் ரூபாவும் செலவாகும் என்று நெடுஞ்சாலைகள் அமைச்சின் பொறியியலாளர்களால் தற்காலிக செலவு மதிப்பீடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.





SHARE

Author: verified_user

0 Comments: