யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளில் விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட முக்கிய பாடங்களில் ஆசிரியர் பற்றாக்குறை நிழ்வுவதாக நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,
இப்பிரச்சினை தொடர்பில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியசம் கவனம் செலுத்தி தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தினார்.
கல்வி, உயர் கல்வி தொடர்பில் செவ்வாய்க்கிழமை (07) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விசேட விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத்தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது….
நாட்டின் கல்வி அபிவிருத்தி தொடர்பில் அதிக அக்கறை செலுத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரது பணிப்புரைக்கமைய இந்தவருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் அதிகளவிலான நிதி கல்விக்கு ஒதுக்கப்பட்டது. கடந்த ஆட்சியில் கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியுடன் ஒப்பிடும் போது இது இரண்டு மடங்கு அதிகமாகும். நல்லாட்சி அரசாங்கம் கல்விக்கு இந்தளவு முன்னுரிமை வழங்குவதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைக்கின்றோம் வரவேற்கின்றோம்.
உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், உயர்கல்வி பிரதியமைச்சர் மெகான் லால் கேரு மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்னன் ஆகியோர் நாட்டின் கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கும் திட்டங்களை நாங்கள் பாராட்டுகின்றோம்.
விசேடமாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நாட்டின் கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடன், கடந்த காலங்களில் செய்யப்படாமல் இருந்த மாற்றங்களை உள்வாங்கி இன்று சர்வதேசத்துக்கு தேவையான அறிவினை புகட்டுகின்ற வகையில் பாடத்திட்டங்கள், பரீட்சை முறைகள் என்பவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். புதிய கல்வி யுகத்தில் மாணவர்களை கொண்டு செல்வதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகளை நாங்கள் பாராட்டுகின்றோம்.
குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணம் யுத்தினால் பாதிக்கபட்ட பிரதேசம். நாங்கள் பயங்கரவாத நிலையிலிருந்து மீண்டு கல்வியினை கட்டியெழுப்புவதற்கு ஆரம்பித்துள்ளோம். அண்மையில் மட்டக்களப்பு வவுனத்தீவு பகுதிக்கு நான் விஜயம் செய்திருந்தேன். அப்பகுதியில் 50 வீதமான ஆசிரியர் பற்றாக்குறை நிழ்வுவதாக அறிய முடிந்தது. குறிப்பாக விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலப் பாடங்களைக் கற்பிப்பதற்கு ஆசிரியர் இல்லாத நிலை அங்குள்ளது. இப்பிரச்சினை அப்பகுதியில் மாத்திரமல்லாது முழு மட்டக்களப்பு மாவட்டத்திலும் உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முக்கிய பாடங்களைக் கற்பிப்பதற்கு ஆசிரயர்கள் இல்லாமையினால் கணிதம் உள்ளிட்ட முக்கிய பாடங்களில் அதிகளவான மாணவர்கள் சித்தியடையத் தவறியுள்ளார்கள்.
கணிதம் சித்தியடையாதால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர்வதற்கான அடிப்படைத் தகுதியையே இழந்துள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உயர்கல்வியை தொடர முடியாத துர்பாக்கிய நிலையில் உள்ளனர்.
இப்பிரச்சினைத் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சிடம் விளக்கம் கோரினால், மாகாணத்துக்கான, மாவட்டத்துக்கான ஆசிரியர் கோட்டா நிறைவடைந்துள்ளதாகவும், எம்மிடத்திலும் ஆசிரியர் பற்றாக்குறை நிழ்வுகின்றதாகவே அது பதில் வழங்குகின்றது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இப்பகுதிகளுக்கு ஆகக்குறைந்தது ஆசியர்களையாவது பெற்றுக் கொடுக்க அரசாங்கம் ஆவணம் செய்ய வேண்டும்.
கல்வி அமைச்சர் இவ்விடயம் தொடர்பில் அதிக கரிசனை செலுத்த வேண்டும். முக்கியமாக கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டதில் உள்ள பாடசாலைகளில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கில பாடங்களில் நிழ்வுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக வேண்டி விசேட வேலைத் திட்டமொன்றின் கீழ் ஆசிரியர்களைத் எமக்கும் தாருங்கள். அல்லது எமது மாவட்டத்தில் உள்ள இப்பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உதவி ஆசிரியர்கள் என்ற அடிப்படையில் குறுகிய கால நியமனங்களை வழங்குகங்கள்.
அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டதில் உயர்தர கல்வியில் கணித, விஞ்ஞான பிரிவுகளில் கல்விகற்கின்ற மாணவர் வீதம் மிகவும் குறைவடைந்துள்ளது. வணிக, கலைப் பிரிவுகளை மாத்திரமே அதிக மாணவர்கள் தெரிவு செய்கின்றனர். விஞ்ஞான, கணித பிரிவுகளுக்கான தேர்ச்சி பெற்ற போதுமான ஆசிரியர்கள் மட்டு. மாவட்டத்தில் இல்லாமையினாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பொறியியல், தொழிநுட்பம், வைத்தியம் உள்ளிட்ட முக்கிய துறைசார்ந்தவர்களை உருவாக்குவதில் கிழக்கு மாகாணம் பின்னிற்கின்றது. இது எமக்கு பாரிய பின்னடைவாகும்.
இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். கிழக்கு மாகாணத்தில் பௌதீக வளங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைகளில் கட்டிடங்கள் இல்லாத நிலை உள்ளது. இன்று வரை தற்காலிக கொட்டில்களில் பாடசாலைகள் நடத்தப்படும் அவல நிலை இருந்துவருகிறது. நூற்றக்கணக்கான பாடசாலைகள் இவ்வாறே இயங்குகின்றன. இவற்றின் மீள் நிர்மாணப் பணிகள் தொடர்பிலும் கல்வி அமைச்சு கவனம் செலுத்த வேண்டும்.
உயர்கல்வியில் சித்தியடைந்தும் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படாத இலட்சக்கணக்கான மாணவர்கள் இன்று உள்ளனர். அவர்களால் வெளிநாடுகளுக்கு சென்று பல்கலைக் கழகங்களைப் பெற முடியாதுள்ளது. ஆகவே, பொறியியல், மருத்துவம், தொழிநுட்பம் சார்ந்த தனியார் பல்கலைக் கழகங்களை இலங்கையில் அமைப்பதற்கு அரசாங்கம் அனுசரனை வழங்கி ஊக்குவிக்க வேண்டும். இந்தியா உள்ளிட்ட இலங்கைக்கு அருகில் உள்ள நாடுகளின் முன்னணி பல்கலைக் கழகங்களை இலங்கைக்கு வரவழைத்து தரமான கல்வியை மாணவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
0 Comments:
Post a Comment