15 Jun 2016

முன்னறிவித்தல்களுமின்றி, அடிக்கடி மின் வெட்டு பல்வேறு தரப்பினரும் விசனம்

SHARE
(றிசாத் ஏ காதர்)

இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் எவ்வித முன்னறிவித்தல்களுமின்றி,
அடிக்கடி மின் வெட்டு இடம்பெறுகின்றமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விசனம் தெரிவிக்கின்றனர்.

மின்சார சபை ஊழியர்கள், ஏற்கனவே திட்டமிட்டுள்ள திருத்த வேலைகளை மேற்கொள்ளும்போது, அமுல்படுத்தப்படும் மின்வெட்டு குறித்து, பொதுமக்களுக்கு அறியத்தருவதிலும் அலட்சியமாக இருந்து வருகின்றனர்.

இதனால் தொழிற்சாலை மற்றும் ஆலைகளில் நாளாந்தம் கூலி வேலை செய்வோர், தமது தொழிலிடங்களுக்கு வந்தும், அறிவித்தல் இல்லாமல் மின்சாரம் தடைசெய்யப்படுவதால், தொழில் செய்ய முடியாமல் வருமானமின்றி வெறுங்கையுடன் வீடு திரும்ப வேண்டியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

மின் வெட்டு தொடர்பில் முன்னறிவித்தல் வழங்கப்படுமாயின், இவ்வாறான கூலித் தொழிலாளர்கள், குறித்த தினத்தில் வருமானத்தினைப் பெற்றுக் கொள்ளும் வேறு தொழிலுக்குச் செல்ல, வசதியாக இருக்கும் எனவும் கூறுகின்றனர்.

இவ்வாறான முன் அறிவித்தலின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை மின் வெட்டு அமுல் செய்யப்பபட்டது. இதேபோன்று, நேற்று செவ்வாய்கிழமையும் காலையிலிருந்து சுமார் 04 மணிநேரம் முன் அறிவிப்பின்றி மின்சாரம் தடைசெய்யப்பட்டது.

தற்போது, அம்பாறை மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வருகின்றமையினால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மக்கள் நோன்பு நோற்று களைப்புடன் இருக்கும் தற்போதைய காலத்தில், முன் அறிவித்தலின்றி மின்வெட்டினை அமுல் செய்வதால், பொதுமக்கள் மேலும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. 

ஏற்கனவே, முன் அறிவித்தல் இல்லாமல் மின்சாரம் தடைசெய்யப்படுகின்றமை தொடர்பில் பலமுறை ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளபோதிலும், இதுகுறித்து இலங்கை மின்சார சபையின் கல்முனைப் பிராந்திய பொறியியலாளர் உரிய நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே, எதிர்வரும் காலங்களிலாவது மின்வெட்டு தொடர்பில் முன் அறிவித்தல் வழங்கி, பொதுமக்களுக்கு ஏற்படும் மேலதிக அசௌகரியங்களை தடுப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
SHARE

Author: verified_user

0 Comments: