16 Jun 2016

மீள்குடியேறியுள்ள கிராமத்திற்கு வவுசர் மூலம் குடி நீர் விநியோகம்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் தமிழ் முஸ்லிம் மக்கள் மீள்குடியேறியுள்ள பொத்தானைக் கிராமத்திற்கு வவுசர் மூலம் 2000 லீற்றர் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைச் செயலாளர் எஸ்.எம்.எம். ஸாபி தெரிவித்தார்.
இந்தப் பிரதேச மக்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் அவர்களிடம் தமது குடிதண்ணீர் தட்டுப்பாட்டை நிவர்த்திக்குமாறும் பொத்தானை கிராம மக்கள் குடிநீர் தேடி நீண்ட தூரம் அலைவதை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தனர்.

அந்த வேண்டுகோளை அடுத்து உடனடியாக நீர் விநியோகத்தை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் பணித்திருந்தார்.

அதற்கமைய புதன்கிழமை (ஜுன் 15, 2016) தொடக்கம் பொத்தானை கிராமத்திலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வாழும் பிரிவுகளில் 1000 லீற்றர் கொள்ளளவுள்ள இரண்டு நீர்த்தாங்கிகளை வைத்து நீர் நிரப்பப்படுவதாக செயலாளர் மேலும் கூறினார்.

1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனவன்முறைகளின் பின்னர் பொத்தானைக் கிராமத்தில் மக்கள் தமது சுய முயற்சியினால் மீள்குடியேறி வருகின்றனர்.
இதுவரை அங்கு 67 முஸ்லிம் குடும்பங்களும், 40 தமிழ் குடும்பங்களும் குடியமர்ந்துள்ளனர்.

ஆனால் இவர்களுக்குரிய வீடு, வீதி, மின்சாரம், குடி நீர் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை என்று கிராம மக்கள் குறிப்பிடுகின்றனர். 

இதேவேளை கிழக்கு மாகாண முதலமைச்சரின் முயற்சியினால் அப்பிரதேசத்திற்குப் போக்குவரத்துச் சேவை திங்கட்கிழமை 13.06.2016 முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: