16 Jun 2016

கதிரவெளி கனிஷ்ட வித்தியாலயத்தில் ஆசிரியர் வெற்றிடம் ; மாணவர்கள் வீதியில்

SHARE
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாகரைக் கல்விக் கோட்டத்திலுள்ள கதிரவெளி விக்னேஸ்வரா கனிஷ்ர வித்தியாலயத்தில் நிலவும்  ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு
கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை மாணவர்களினால் பிரதான வீதியை இடைமறித்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியை இரு பக்கமும் வழி மறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வீதியில் அமர்ந்து ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டம் 9 மணி வரை இடம்பெற்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குறித்த பாடசாலையில் 425 மாணவர்கள் கல்வி கற்கின்ற போதிலும்  9 ஆசிரியர்கள் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் 12 ஆசிரியர் வெற்றிடம் காணப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் பாடசாலையில் இருந்து மட்டக்களப்பு பிரதேச பாடசாலைக்கு இடமாற்றப்பட்ட இரண்டு ஆசிரியர்களுக்கு பதிலாக இரண்டு ஆசிரியர்களை நியமித்து மாணவர்களின் கல்வி நிலையை முன்னேற்றுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான சீனித்திம்பி யோகேஸ்வரன் வருகை தந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இது தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணியுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக அறிவித்தார்.
இதனையடுத்து ஒரு வாரத்திற்குள் இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என கிழக்கு மாகாண கல்வியமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் தானும் ஆர்பாட்டத்தில் ஈடுபடுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்திம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரும்இ பிரதேச அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான சீ.யோகேஸ்வரன், வாகரைக் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.பரமேஸ்வரன், வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு மக்களால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
ஆர்பாட்டத்தில் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா கலந்து கொள்ளாததுடன் அவருடைய தொலைபேசிக்கு செயலிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
ஆர்பாட்டத்திற்கு வருகை தராமல் இருந்த வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: