19 Jun 2016

ஊடகவியலாளர்களை அச்சுறுத்த ஒருபோதும் இடமளிக்க போவதில்லை

SHARE
ஊடகவியலாளர்களை அச்சுறுத்த ஒரு போதும் நாம் இடமளிக்கப் போவதில்லையென சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகர் அஜித் ரோகண தெரிவித்தார்அண்மையில் பொலிஸ்
விசேட அதிரடிப்பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரியொருவரால் ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பாக இன்று (18) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
இங்கு கலந்து கொண்டு மேலும் கருத்து தெரிவித்த அவர், அண்மையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஊடகவியலாளர் மாநாட்டில் அப்பிரிவின் பொறுப்பதிகாரி யொருவர் பாதாள உலகக் குழுக்களை ஒடுக்க தெரிந்த எமக்கு அவர்களுக்கு துணைபோகும் ஊடகவியலாளர்களையும் கவனித்து கொள்ள தெரியும் என்று தெரிவித்திருந்தார். இக்கருத்து ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது பிழையானதொரு விடயமாகும். இவ் ஊடகவியலாளர் மாநாடு எமக்கு தெரியாமல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

நாம் ஊடகவியலாளர்களுடன் சிறந்ததொரு உறவினைப் பேணிவருகின்றோம். பல விடயங்களில் அவர்கள் எமக்கு உதவியிருக்கிறார்கள். அவர்களை இவ்வாறு அச்சுறுத்த நாம் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தலைமையில் விசேட குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் துரிதகதியில் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் குறித்த அதிகாரியினால் விடுக்கப்பட்ட அறிக்கை மிகவும் கண்டிக்கப்படத்தக்கதொன்றாகும். இது குறித்து பொலிஸ் திணைக்களம் மற்றும் அனைத்து அதிகாரிகள் சார்பிலும் அனைத்து ஊடகவியலாளர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். நடைபெற்ற நிகழ்வில் பொலிஸ் அதிகாரி பிரியந்த ஜயக்கொடியும் உடனிருந்தார். 
SHARE

Author: verified_user

0 Comments: