சர்வதேச தரம் வாய்ந்த கல்வியை நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கான முயற்சிகளை நல்லாட்சி அரசு முன்னெடுத்து வரும் நிலையில், பரீட்சைகளில் சித்திபெற்றும் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு
செய்யப்படாத திறமையான மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தினார்.
அந்தவகையில், சர்வதேச தரம் வாய்ந்த தனியார் பல்கலைக்கழகங்களை இலங்கையில் நிறுவுவதற்கு அரசாங்கம் அணுசரனை வழங்க வேண்டும். இதன் மூலம் நவீன சவால்களை முகம்கொடுக்கக் கூடிய மாணவ சமூகத்தை எம்மால் கட்டியெழுப்ப முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டின் கல்வி அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் விசேட கவனம் செலுத்தியுள்ளனர். உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோரும் கல்வித் துறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை செய்து வருகின்றனர்.
எனினும், திறமையான மாணவர்கள் பரீட்சைகளில் சித்தியடைந்தும் பல்கலைக்கழகத்துக்கு செல்ல முடியாத கல்வி முறையே தற்போது நடைமுறையில் உள்ளது. இதனால் திறமையான மாணவர்கள் சாதாரண துறைகளை தெரிவு செய்கின்றனர். பணமுள்ளவர்கள் உயர்கவ்விக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.
ஆகவே, பொறியியல், மருத்துவம், தொழிநுட்பம் சார்ந்த தனியார் பல்கலைக்கழகங்களை இலங்கையில் அமைப்பதற்கு அரசாங்கம் அனுசரனை வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.
நாட்டில் உள்ள கல்வித் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு தனியார் பல்கலைக்கழகங்களை நிருவுவது சிறந்த வழியாகும். இந்தியா உள்ளிட்ட இலங்கைக்கு அருகில் உள்ள நாடுகளின் முன்னணி பல்கலைக்கழகங்களை இலங்கைக்கு வரவழைத்து தரமான கல்வியை மாணவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - என்றார்.
0 Comments:
Post a Comment