24 Jun 2016

மத்திய அரசிலுள்ள நல்லாட்சியை விட கிழக்கு மாகாண சபையிலேதான் உண்மையான நல்லாட்சி இடம்பெறுகிறது கிழக்கு முதல்வர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்

SHARE
மத்திய அரசில் ஒரு நல்லாட்சி இடம்பெறுகின்றபோதும் அதனையும் விட சிறந்ததொரு நல்லாட்சி கிழக்கு மாகாண சபையிலேதான் நடைபெறுகிறது என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
மட்டக்களப்பு-
பதுளைவீதி இலுப்படிச்சேனையில் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உப அலுவலகம், நூலகம், என்பனவற்றை உள்ளடக்கிய பல்தேவைக் கட்டிடத்துக்கு சுமார் 87 இலட்சம் ரூபா செலவில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு புதன்கிழமை மாலை (ஜுன் 22, 2016) கிழக்கு முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டது.

அந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர்,

எல்லாக் கட்சிகளும் எல்லா சமூகங்களும் இணைந்து மிகவும் வெளிப்படைத் தன்மையாக, ஒழிவு மறைவும் வேறுபாடுகள், புறக்கணிப்புக்கள் இன்றி, எல்லா இடங்களையும், இனங்களையும், மதங்களையும், சமமாக மதித்துப் பங்கீடு செய்கின்ற ஒரு நிலைப்பாட்டிலே நாம் ஒன்றித்து செயற்பட்டு வருகின்றோம்.
இது ஒன்றும் இலேசுப்பட்ட காரியமல்ல, பாரிய சவால்களுக்கு முகம்கொடுத்தோம், தொடர்ந்தும் அத்தகைய சவால்களை உள்ளும் புறமும் எதிர்கொண்டு வருகின்றோம்.

எங்களது வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த கிழக்கு மாகாண நல்லாட்சியைச் சீர்குலைப்பதற்காக உள்ளும் புறமும் கட்சிக்குள்ளேயும் வெளியேயும் பல்வேறு சதித்திட்டங்களும் சூழ்ச்சிகளும் இடம்பெற்றுக் கொண்டுதானிருக்கின்றன.
இருந்தாலும், நாங்கள் மனம் சளைக்கவில்லை, உறுதியுடனிருந்து தியாகம் செய்து இன ஒற்றுமையைப் பலப்படுத்தி வருகின்றோம்.

கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டால் நமது மாகாணம் தேசிய ரீதியில்  ஒற்றுமையிலும் பொருளாதார வளர்ச்சியிலும் இலங்கைக்கே ஒரு முன்னுதாரணமாக விளங்கும்.
அவ்வாறு ஒரு சரித்திரம் படைப்பதற்கு அனைவரும் முன்வரவேண்டும்.
கிழக்கின் ஐக்கியமிக்க நல்லாட்சி இந்த மாகாண சபை நிருவாகத்தோடு மட்டும் முடிந்து விடக் கூடாது. அது இப்பொழுதிருப்பதைப் போல் எதிர்காலத்திலும் தொடர வேண்டும்.

அரசியல் தலைமைகள் ஒற்றுமைப்பட்டிருப்பது போன்று மக்கள் மத்தியிலும் இன மத வேறுபாடுகளைக் கடந்த ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய பிரார்த்தனைகளாக இருக்கின்றன.

இல்லாவிட்டால் சமூகத்தை இன மத மொழி பிரதேச வேறுபாடுகள் அடிப்படையில் கணப்பொழுதில் குழப்புதற்கு தீய சக்திகள் கங்கணம் கட்டி நிற்கின்றார்கள். அவர்களுக்கு வாய்ப்பளித்து விடக் கூடாது.” என்றார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே. சித்திரவேல், பிரதேச சபைச் செயலாளர் குமுதா ஜோன்பிள்ளை, சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் இந்துமதி விமல்ராஜ், ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ். ஹமீட்,  உட்பட பிரதேச முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


SHARE

Author: verified_user

0 Comments: