20 Jun 2016

புகைத்தலும் போதைப் பொருள் பாவனையும் மனிதனால் உருவாக்கப்பட்ட கேடுவிளைவிக்கும் செயல்களாகும்

SHARE
புகைத்தலும் போதைப் பொருள் பாவனையும் மனிதனால் உருவாக்கப்பட்ட கேடுவிளைவிக்கும் செயல்களாகும் வைத்திய அதிகாரி எச்.எம்.ஏ. மௌஜுத் விழிப்புணர்வு ஊர்வலம்
புகைத்தலும் போதைப் பொருள் பாவினையும் மனிதனால் உருவாக்கப்பட்ட கேடு விளைவிக்கும் செயல்பாடாகும் என ஏறாவூர் ஆதார வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி எச்.எம்.ஏ. மௌஜுத் தெரிவித்தார்.

அனைத்துலக புகைத்தல் மற்றும் போதைப் பொருள் தவிர்ப்பு மாதத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் முதன் முறையாக நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமும் கருத்துரையும் திங்கட்கிழமை (ஜுன் 20, 2016) ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இடம்பெற்றது.

அங்கு நோயாளர்கள், பொதுமக்கள், தாதியர் மற்றும் வைத்தியர்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய வைத்திய அதிகாரி மௌஜுத் மேலும் கூறியதாவது,
பொதுவாகவே புகைத்தலினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் ஆய்வின் அடிப்படையில் ஆதாரபூர்வமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஆயினும், புகைத்தலுக்கும் போதைப் பொருள் பாவினைக்கும் அடிமையானோர் தமக்கு ஏற்படப் போகும் உடற்பாதிப்புக்களை சீர்தூக்கிப் பார்க்காமல் தொடர்ந்தும் அவற்றை நுகர்ந்து கொண்டுதானிருக்கின்றார்கள்.

இதனால் புகைத்தலுக்கும் போதைப் பொருளுக்கும் அடிமையானோர் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அவருக்கு அருகிலிருப்போர், அவரது குடும்பம் ஈற்றில் ஒட்டு மொத்த சமூகமுமே பாதிப்பை எதிர்கொள்கின்றது.

புகைத்தலையும் போதைப் பொருள் பாவினையையும் ஒருவர் விட்டுவிடுவதன் மூலம் அவரும் அருக்கு அருகிலிருப்போரும் ஒட்டு மொத்த சமூகமும் நன்மை பெறுகின்றது.

அதன் மூலம் ஒரு ஆரோக்கியமான சமூகத்தையும் எதிர்கால அங்கவீனமில்லாத சந்ததியையும் நாம் உருவாக்கிக் கொள்ள முடியும்.

இதயநோய், பக்கவாதம், புற்றுநோய், குருதிச் சுற்றோட்டம் தடைப்படல், போன்றவற்றை ஏற்படுத்தக் கூடிய சுமார் 4000 தீங்கான பதார்த்தங்கள் சிகரெட்டில் உள்ளதாக ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இத்தகைய கொடிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய புகைத்தலையும் ஏனைய போதைப் பொருள் பாவினையையும் நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இத்தகைய விழிப்புணர்வூட்டல்கள் எல்லா மட்டங்களிலும் இடம்பெறுகின்றன என்றார்.

இந்நிகழ்வில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம். தாரிக், பொது வைத்திய நிபுணர் சமிந்த கோட்டகே(Dr. Chaminda Kottage) உட்பட நோயாளர்கள், பொதுமக்கள், தாதியர் மற்றும் வைத்தியர்களும் கலந்து கொண்டனர்.

புகைத்தல் மற்றும் போதைப் பொருள் தவிர்ப்பு மாதம் ஜுன் 01 ஆம் திகதி தொடக்கம் ஜுன் 31 ஆம் திகதி வரை அனுஸ்டிக்கப்படுகின்றது.









SHARE

Author: verified_user

0 Comments: