வறுமையைக் கண்டு அஞ்சாமல் அந்நியருக்கும் ஆதரவு தேவைப்பட்ட அனைவருக்கும் நபிகள் நாயகம் வாரி வழங்கினார்கள் என ஏறாவூர் ஹைறாத் மகளிர் அறபிக் கல்லூரியின் விரிவுரையாளர் மௌலவி ஏ.ஆர். றிஸ்வான் தெரிவித்தார்.
ஏறாவூர் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம். தாரிக் தலைமையில் புனித றமழான் நோன்பு துறக்கும் நட்புறவுடனனான நிகழ்வு செவ்வாய்க்கிழமை (ஜுன் 21, 2016) ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.
அங்கு தொடர்ந்து சன்மார்க்கப் பிரசங்கம் நிகழ்த்திய விரிவுரையாளர் றிஸ்வான், “நபிகள் நாயகம் அவர்களுக்கு ஈடு இணையாக வாரி வழங்குவதில் இவ்வுலகில் யாருமே இருந்திருக்க முடியாது.
அவர்கள் காற்றைப்போல குறைவில்லாமல் அள்ளி அள்ளிக் கொடுத்தார்கள். தர்மத்தைக் கொண்டு அவர்கள் புகழடைந்தார்கள்.
மேலும், தனது சொந்த சமூகத்தாருக்கும் அந்நிய சமூகத்தாருக்கும் அவர்கள் சளைக்காமல் வாரி இறைத்தார்கள்.
ஒரு முறை நபிகள் நாயகத்திடம் அந்நிய சமூகத் தலைவர் ஒருவர் வந்து தனக்கும் தனது சமூக மக்களுக்கும் உதவுமாறு கேட்டபொழுது இரண்டு மலைகளுக்கிடைப்பட்ட கணவாய் எங்கும் பரந்து விரிந்த பரப்பில் பரவிக் கிடந்த ஆட்டு மந்தைகளை அப்படியே கொண்டு செல்லுங்கள் என்று அந்த அந்நிய சமூகத் தலைவனின் பொறுப்பில் ஒப்படைத்தார்கள்.
தர்மம் செய்வதில் அவர்கள் காட்டிய அவசரம் இன்றளவும் உலகில் வியந்து பேசப்படுகின்றது. அதனால் அவர்களுக்கு அல்லாஹ்வின் பொருட்டிலிருந்து அளவிட முடியாத அருளைப் பெற்றுக் கொண்டார்கள்.
எனவே, தர்மத்தை தேவையானோருக்கு வாரிவழங்குவதில் நாம் ஒருபோதும் பின்னிற்கக் கூடாது.” என்றார்.
இந்த இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வில் வைத்தியர்கள், தாதியர்கள், உட்பட இன்னும் சமூகத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment