மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் பொத்தானைக் கிராமத்தில் 1990 ஆம் இடம்பெற்ற இனக் கலவரங்களினால் இடம்பெயர்ந்து தற்போது தமது சொந்த முயற்சியால் அங்கு மீள்குடியேறிய தங்களை வாக்காளர்களாகப் பதிவதில் கிராம சேவையாளர் புறக்கணிப்புடன் நடந்து கொள்வதாக கிராம மக்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரின்
கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளனர்.
1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனவன்முறைகளின் பின்னர் பொத்தானைக் கிராமத்தில் தற்போது தமிழ் முஸ்லிம் மக்கள் தமது சுய முயற்சியில் குடியேறிவருகின்ற நிலையில் தமக்கான வாக்காளர் பதிவுகளை அந்தக் கிராமத்தில் பதிந்து கொள்வதில் கிராம சேவையாளர் புறக்கணித்து வருவதாக கிராம மக்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் இணைப்பாளரினூடாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.
தமது கிராம மீள்குடியேறிய மக்கள் புறக்கணிக்கப்படுவது சம்பந்தமாக பொத்தானைக் கிராம முஹைதீன் ஜும்மா பள்ளிவாசல் தலைவரான ஏ.எல். யூனுஸ் வியாழக்கிழமை (ஜுன் 16, 2016) தனது ஆட்சேபனையைத் தெரிவித்தார். அவர் இது பற்றி மேலும் தெரிவிக்கையில்,
பொத்தானைக் கிராமத்திலிருந்து 1990 ஆம் இனக்கலவரத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களில் இதுவரை அங்கு 67 முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியமர்ந்துள்ளார்கள்.
ஆயினும், அவர்களில் 19 குடும்பங்களுக்கே வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கு பொத்தானைக் கிராமத்திற்குப் பொறுப்பாகவுள்ள புணானை மேற்கு அணைக்கட்டு கிராம சேவை உத்தியோகத்தரால் வாக்காளர் இடாப்பு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஏனைய 48 குடும்பங்களுக்கும் வாக்காளர் பதிவுக்கான விண்ணப்பப் பத்திரங்கள் வழங்கப் படவில்லை.
இதேவேளை, வாக்காளர் இடாப்பு விண்ணப்பப்பத்திரம் வழங்கப்படாத இந்தக் குடும்பங்கள் அனைத்தும் தாம் இடம்பெயர்ந்திருந்தபோது தற்காலிகமாக வசித்துவந்த ஒட்டமாவடி, வாழைச்சேனை, காவத்தமுனை ஆகிய பிரதேசங்களிலிருந்த தமது வாக்காளர் பதிவுகளை அகற்றிக் கொண்டு அதற்கான அதிகாரிகளின் அதிகாரபூர்வ கடிதங்களையும் குறித்த கிராம சேவகரிடம் சமர்ப்பித்துள்ளனர்.
எவ்வாறாயினும், அவர்களை பொத்தானை கிராம வாக்காளர் பட்டியலுடன் சேர்ப்பதற்கு சம்மதிக்காது கிராம சேவையாளர் மறுத்துவருவதால் தாம் வாக்குரிமையற்வர்களாக ஆக்கப்படுவோம் என்று மக்கள் அஞ்சுகின்றார்கள்.
எனவே, நடப்பாண்டின் வாக்காளர் பதிவு ஜுன் மாதம் முடிவதற்கிடையில் பதிவற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கும் மீள்குடியேயுள்ள மக்களை வாக்காளர்களாகப் பதிவு செய்யுமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றார்.
மேலும், தமது கிராமத்தில் வந்து ஒரு தினத்தை ஒதுக்கி கிராம சேவையாளர் கடமை புரிவதில்லை எனவும் கிராம மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால் கிராம சேவையாளரிடம் அலுவல்களை முடித்துக் கொள்ள போக்குவரத்து அற்ற சூழ்நிலையில் தாம் அலைந்து திரிவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பொத்தானைக் கிராம மக்கள் சுட்டிக் காட்டிய இந்த விடயம் குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளதாகவும் வாரத்தில் ஒரு நாள் கிராம சேவையாளரை பொத்தானைக் கிராத்திற்குச் சென்று பணியாற்றுவதற்கான ஒழுங்குகள் செய்யுமாறு பிரதேச செயலாளரைக் கேட்டிருப்பதாகவும் முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எஸ். ஹிதாயத்துல்லாஹ் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment