நாட்டுக்குக் குறுக்கே சவாரி சென்று விட்டு பாதுகாப்பாக தமது கிராமத்திற்குத் திரும்பிய இளைஞர்கள் வீட்டுவாசல் மிதிக்கும் முன் இடம்பெற்ற விபத்தில் சிக்கி ஒரு இளைஞர் பலியானார் மற்றுமொரு இளைஞர் படுகாயம் அடைந்துள்ளார்.
இச்சம்பவம் மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை எனும் கிராமத்தில் திங்கட்கிழமை (06) மாலை இடம்பெற்றுள்ளது.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் செலுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் நின்ற மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்களுடன் மோதியதில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே துடிதுடித்து மரணமாக மற்றொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.
விபத்தில் பலியானவர் திக்கோடையைச் சேர்ந்த சின்னராஜா சதுர்ஜன் (வயது 18) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரோடு மோட்டார் சைக்கிளில் மோதுண்டு படுகாயமடைந்த அதே கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் இந்திரகுமார் (வயது 24 ) என்பவர் தற்போது களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, நண்பர்களான ஆறு பேர் 3 மோட்டார் சைக்கிள்களில் சவாரி செய்து யாழ்ப்பாணம் சென்று திங்கட்கிழமை தமது ஊரான திக்கோடை கிராத்திற்கு வந்து அவரவர் வீடு செல்லும் முன்பாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
அதிவேகத்துடன் திரும்பிக் கொண்டிருந்த நண்பர்களில் முந்திச் சென்ற இருவர் தமது வீட்டருகில் இறங்கி விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த மற்றவர்களுக்கு கையசைக்க காத்திருந்தபோது பின்னால் அதிவேகத்துடன் வந்து கொண்டிருந்த நண்பர்களின் மற்றொரு மோட்டார் சைக்கிள், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.
அவ்வேளையில் அங்கு நின்றிருந்த சதுர்ஜன் என்ற நண்பன் அருகிலிருந்த மதகு ஒன்றின் கட்டில் தூக்கி வீசப்பட்டுள்ளார். அவ்வேளையில் அவர் தலையில் அணிந்திருந்த தலைக் கவசமும் நொருங்கி தலையில் பலத்த காயமுண்டாகி இரத்தப் பெருக்கு ஏற்பட்டு ஸ்தலத்திலேயே துடிதுடித்து மரணித்துள்ளார்.
மற்றைய நண்பரான இந்திரகுமார் என்பவருக்கு பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார் இச்சம்பவம் குறித்து வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment