மட்டக்களப்பு மகளிர் உயர்தர தேசிய பாடசாலை ஒன்றில் எதிர்வரும் 01.07.2016 ஆம் திகதியன்று பாடசாலை அதிபர் தலைமையில் ஆரம்பப்பிரிவு பாடசாலைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக அந்நிகழ்வில் கலந்து கொள்ளும் அதிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்விற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வி. ராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
மேற்படி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் உப தவிசாளர் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அரச பிரதிநிதிகளும் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேற்படி அழைப்பிதழில் அதிதிகளின் பெயர் மற்றும் பதவிகள் ஒழுங்கான முறையில் நிரல்படுத்தப்படாமல் பல தவறுகள் இடம்பெற்றுள்ளதாகவும் இது அவர்களது கௌரவித்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நடவடிக்கையாகவுள்ளதாக அழைப்பிதழினை பார்வையிட்ட அதிதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பின் பிரதான நகர்ப்புறத்தின் மையத்தின் திகழும் பிரபல்யம் மிக்க பாடசாலை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் இவ்வாறு நிரல்படுத்துகை தவறுகள் பல இடம்பெற்றுள்ளமையானது வெறும் தவறுதலாக இடம்பெற்றுள்ளது என்று கூற முடியாது. இது ஏதோவொரு அரசியல் பின்னணில் கருமமாற்றப்பட்டிருப்பதை அறிய முடிகின்றது என ஒரு அரசியல் பிரமுகர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கூட அழைப்பிதழ் ஒன்றினை வெளியிட முன்பு சரி பிழை பார்த்து விடயத்தினை அச்சுப்பதிவுக்கு அனுமதி வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அவர் கூட இவ்விடயத்தில் தவறு இழைத்துள்ளார் என்றும் அவர் கூறினார்.
அழைப்பிதழில் நிரல்படுத்தப்படலின் போது முதலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பின்னர் மாகாணசபை அமைச்சர்கள் மாகாண சபை தவிசாளர், உபதவிசாளர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் என அரசியல் பிரமுகர்களின் பதவி மற்றும் ஏனைய பதிவிகள் முன்னிலைப்படுத்தப்படல் வேண்டும்.
இதனை விடுத்து தமக்கு பிடித்தமான சில அரசியல் பிரமுகர்களை முன்னிலைப்படுத்தும் முகமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றும் தற்போது வகிக்கும் பதவிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதேவேளை மட்டக்களப்பில் முதன்மை வாக்குப் பெற்றதுடன் மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவராகவும் செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஞா.சிறிநேசனது பெயரும் பதவிகளும்; முன்னிலைப்படத்தப்படவில்லை.
இதேபோன்று கிழக்கு மாகாண சபை உப தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் என்று மாத்திரம் குறிப்பிடப்பட்டுள்ளதோடு அது பெயர் வரிசையில் இறுதியில் அச்சிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பல தவறுகளை அழைப்பிதழில் காணலாம்.
எனவே இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள நினைக்கும் மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்கு வழங்கும் அழைப்பிதழினை நன்கு பார்வையிட்டு முறையான நிரல்படுத்துகை பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை அறிந்து நிகழ்வுகளில் கலந்து கொள்ள தீர்மானம் எடுக்க வேண்டும்.
அதனை விடுத்து குட்டக் குட்டக் குட்டப்படும் மடையர்களாக இருக்கக் கூடாது.
என்றும் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment