28 Jun 2016

போதைவஸ்து, சிறுவர் துஷ்பிரயோகம், நன்னடத்தை பற்றி பொலிஸாரால் மாணவர்களுக்கு விழிப்புணர்வு.

SHARE
சமகாலத்தில் மாணவர்களிடையே அதிகரித்துவரும் போதைவஸ்து, சிறுவர் துஷ்பிரயோகம், நன்னடத்தைப் பிறழ்வு பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக மட்டக்களப்பு
ஏறாவூர் பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.ஜி.ஏ. வீரசிங்ஹ தெரிவித்தார்.

இது தொடர்பான விழிப்புணர்வூட்டல் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (ஜுன் 28, 2016) ஏறாவூர்ப்பற்று 2 கல்விக் கோட்டத்திலுள்ள வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஏறாவூர் பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.ஜி.ஏ. வீரசிங்ஹ மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் எம்.எம்.எம். பைஸல் ஆகியோரால் மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டது.

பாடசாலை அதிபர் எஸ்.மோகன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுமார் 1300 மாணவர்களும் 49 ஆசிரியர்களும் பங்குபற்றினர்.
தற்காலத்தில் பல்வேறு விதங்களில் போதைப் பொருட்கள்; மாணவர்களிடம் சேர்ப்பிக்கப்படுவதாகவும் அவற்றையிட்டு மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோரும், பாதுகாவலர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும், போதைப் பொருள் பாவனை காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதோடு இடைவிலகல், சிறுவர் துஷ்பிரயோகம், நன்னடத்தைப் பிறழ்வுகள், சமூகச் சீரழிகள், குடும்பச் சிதைவுகள் என்பன ஏற்படுவதாகவும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன், போதைப் பொருள் பாவனையால் ஒன்றன் பின் ஒன்றான தொடர் நாச விளைவுகள் குடும்பத்தையும், சமூகத்தையும், நாட்டையும் சீரழிக்கின்றன என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.

மதுபானம் மற்றும் இன்னோரன்ன போதைப் பொருள் பாவனையில் மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையில் 3 வது இடத்திலுள்ளது. எனவே, இனி வரும் காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தை போதை மற்றும் மதுபானப் பாவனைப் பட்டியலிலிருந்து அகற்ற வேண்டிய பொறுப்பு இளம் சந்ததியினராகிய மாணவர்களிடம் உண்டென்றும் அங்கு வலியுறுத்தப்பட்டது. 









SHARE

Author: verified_user

0 Comments: