மட்டக்களப்பு, கல்குடாக் கல்வி வலயத்தில் தற்போது 86 ஆசிரியர்களுக்கான உடனடித் தேவைப்பாடு உள்ளதாக அவ் வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா தெரிவித்தார். இவ் வலயத்தில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுவதால், மாணவர்களும் பெற்றோரும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், உடனடியாக ஆசிரியர்களை நியமிப்பதற்கு போதுமான ஆசிரியர்கள் இங்கு இல்லை எனவும் அவர் கூறினார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இவ் வலயத்திலிருந்து 123 ஆசிரியர்கள் இவ் வருடம் இடமாற்றம் பெற்று ஏனைய வலயங்களுக்குச் சென்றுள்ளனர். இதனாலேயே, இப் பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுகிறது. மேலும், இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களுக்குப் பதிலாக இவ்வலயத்துக்கு 39 ஆசிரியர்கள் வழங்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், அவர்கள் இதுவரையில் கடமையைப் பொறுப்பேற்கவில்லை.
பௌதீகவியல் பாடத்துக்கு 02 ஆசிரியர்களும் கணித பாடத்துக்கு 14 ஆசிரியர்களும் விஞ்ஞானப் பாடத்துக்கு 13 ஆசிரியர்களும் வரலாறுப் பாடத்துக்கு 07 ஆசிரியர்களும் அளவையில் பாடத்துக்கு 01 ஆசிரியரும் சைவசமயப் பாடத்துக்கு 01 ஆசிரியரும் கிறிஸ்தவ பாடத்துக்கு 01 ஆசிரியரும் நாடகமும் அரங்கியலும் பாடத்துக்கு 04 ஆசிரியர்களும் தமிழ்மொழிப் பாடத்துக்கு 09 ஆசிரியர்களும் ஆங்கிலப் பாடத்துக்கு 07 ஆசிரியர்களும் உடற்கல்விப் பாடத்துக்கு 05 ஆசிரியர்களும் அரசியல் பாடத்துக்கு 02 ஆசிரியர்களும் சங்கீதப் பாடத்துக்கு 03 ஆசிரியர்களும் சித்திரப் பாடத்துக்கு 01 ஆசிரியரும் விவசாயப் பாடத்துக்கு 01 ஆசிரியரும் ஆரம்பக் கல்விக்கு 10 ஆசிரியர்களும் பொதுப்பட்டதாரிகள் 05 பேரும் தேவைப்படுகின்றனர்.
மட்டக்களப்பு மற்றும் பட்டிருப்புக் கல்வி வலயங்களில் மேலதிகமாக ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களை உடனடியாக இவ்வலயத்துக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாவிடின், இவ்வலயத்திலிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களின் இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டு மீண்டும் இவ்வலயத்துக்கு மீள இணைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment