அடுத்த இருவாரங்களுக்குள் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திற்கு
12 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என கல்குடா வலய கல்வி பணிப்பாளர் எஸ். ஸ்ரீகிருஸ்ணராஜா தெரிவித்தார்.
மேற்படி பாடசாலையில் நிலவும் அதிகப்படியான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கக் கோரியும் பாடசாலை நிருவாகத்தின் சீரின்மையைக் கண்டித்தும் திங்கட்கிழமை 06.06.2016 ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இந்தப் பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைபற்றிக் கேட்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
இது விடயமாக மேலும் அவர் கூறும்போது வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் 72 ஆசிரிய ஆளணிப் பதவிகள் உள்ளன. ஆயினும் தற்போது அங்கு 50 ஆசிரியர்கள் கடமையிலுள்ளார்கள்.
இந்த ஆசிரியர் பற்றாக்குறையைக் கருத்திற் கொண்டு அடுத்த இருவாரங்களுக்குள் 12 ஆசிரியர்களை கல்குடா கல்வி வலயத்தின் ஏனைய பாடசாலைகளிலிருந்து விடுவித்து வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திற்கு அனுப்ப வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்றார்.
கல்குடா கல்வி வலயத்திலுள்ள அனைத்துப் பாடசாலை மாணவர்களினதும் கல்வி நலன் கருதி இந்த ஆசிரியர் இடமாற்றங்களை குழப்பாமல் அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment