21 May 2016

அனர்த்த முகாமைத்து அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி பற்றாக்குறை நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

SHARE
சீரற்ற வானிலையினால் வீடுசொத்துக்களை இழந்த மக்களுக்கு இழப்பீட்டினை வழங்க அரசு நடவடிக்கை எடுத்த போதிலும் அதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதல்ல எனத்தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அதற்குத் தேவையான முழுமையான நிதியை சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு ஒதுக்குமாறு நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்

அதேவேளை, வடக்கு கிழக்கு மாகாணங்களில் சேதமடைந்துள்ள வீடுகளுக்கு அப்பால் அழிவடைந்துள்ள விவசாய நிலங்களுக்கான இழப்பீட்டினை வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அரசிடம் கோரிக்கை முன்வைத்தார்
நாடாளுமன்றத்தில் நேற்று விசேட உறையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்
அவர் அங்கு மேலும் கூறியதாவது:-
சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதில் இரவு பகல் பாராது பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதை நன்றியுடன் பாராட்டுகிறேன்
கேகாலை மாவட்டம் பாரிய அழிவுக்கு உட்பட்டுள்ளது. அதிலும் விசேடமாக அரநாயக்கவில் ஏற்பட்டுள்ள மண்சரிவு தொடர்பில் ஜனாதிபதி சம்பவ இடத்துக்கே விஜயம் செய்து ஆராய்ந்திருந்தார். அவருடன் அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிடிய, அநுர பிரயதர்ஷன யாப்பா ஆகியோரும் சென்றிருந்தனர்

அதனைத் தொடர்ந்து, வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பாதிக்கப்பட்டுள்ள சகல பகுதிகளுக்கும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், முற்றாக பாதிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு 25 இலட்சம் ரூபாவினை வழங்குமாறும் பணிப்புரை விடுத்திருந்தார்

எனினும், இந்த அனர்த்தத்தினால் ஏற்பட்டுள்ள அழிவினை சரிசெய்வதற்கு அரசினால் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதாமானது அல்ல. ஆகவே, தேவைப்படும் முழுமையான நிதியினை பூரணமாக வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏன் எனில் கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகள் முழுமையாக இதுவரை வழங்கப்படவில்லை

ஆகவே, அனர்த்ததினால் வீடுகளை இழந்துள்ள கொழும்பு, கேகாலை, கண்டி உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு மீள்கட்டுமான பணிகளுக்காக நிதியை அரசு உடனடியாக வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மக்களது வாழ்வை மீள் கட்டியெழுப்ப வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது

அதேபோன்று, இவ்வாறான அனர்த்தங்கள் எதிர்காலத்தில் ஏற்படாது தடுப்பதற்கும், பாதிப்பை குறைப்பதற்கும் ஏற்றவாரான தொழிநுட்ப வசதிகள் இலங்கையில் செய்யப்பட வேண்டும். அனர்த்தங்களை மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கும் வகையிலான நவீன உபகரணங்களை எமது வளிமண்டல திணைக்களங்களுக்கு அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும். – எனத்தெரிவித்தார்


SHARE

Author: verified_user

0 Comments: