31 May 2016

ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி வேண்டி நாளை மட்டில் கவனயீர்ப்பு போராட்டம்

SHARE
(பழுவூரான்)

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐ.நடேசனின் 12வது நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றிலில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை நாளை புதன்கிழமை காலை 9.00மணியளவில் நடாத்தவுள்ளது.

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் படுகொலை விசாரணையை மீள ஆரம்பிக்ககோரியும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் விசாரணைகளை துரிதப்படுத்தக்கோரியும் ஊடக சுதந்திரத்தினை வலியுறுத்தியும் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளது.

இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் அனைத்து ஊடகவியலாளர்களையும் மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அரசியல் பிரதிநிதிகளையும் சிவில் சமூக பிரதிநிதிகளையும் கலந்துகொண்டு வலுச்சேர்க்குமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

2004ஆம் ஆண்டு மே 31ஆம் திகதி திங்கட்கிழமை நடேசன், தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்த வேளை மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1991ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் வீரகேசரி, சக்தி மற்றும் வெளிநாட்டு ஊடகங்களிலும் கடமையாற்றிய நடேசன் வடக்கு கிழக்கு மாகாணசபை அமைக்கப்பட்ட போது மாகாணசபையின் தகவல் உதவி பணிப்பாளராகவும் பணியாற்றினார்.

1990ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணசபையை விட்டு அப்போதைய முதலமைச்சர் வரதராசபெருமாள் தலைமையிலானவர்கள் இந்தியாவுக்கு கப்பல் ஏறி சென்ற போது நடேசன் அவர்களுடன் செல்லாது மட்டக்களப்புக்கு வந்திருந்தார். அதனையடுத்து ஊடகப்பணியில் தன்னை இணைத்துக் கொண்ட ஜீ.நடேசன் 2004ஆம் ஆண்டில் கொல்லப்பட்டபோதும் அவரது கொலை தொடர்பான விசாரணைகள் முழுமையாக நிறைவுபடுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



SHARE

Author: verified_user

0 Comments: