நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலைக் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்குவதற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பிலும்
, அங்கு தேவைப்படும் நிவாரணப் பொருட்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்துமாறு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரயதர்ஷன யாப்பாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனரத்த முகாமைத்து அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக எழுத்து மூலம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ள இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அனர்த்த முகாமைத்துவ அமைச்சரை தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு இவ்விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.
இதன் போது இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய காலநிலை மாற்றாத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை நாங்கள் வரவேற்கின்றோம்.
அதேவேளை, இந்த காலநிலை சீற்றத்தினால் கிழக்கு மாகாணம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் கிடைக்கக் கூடிய வகையில் ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். அது மட்டுமல்லாது, இப்பகுதியில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன அவற்றுக்கான நஷ்டஈட்டினை பெற்றுக் கொடுக்க தங்களது அமைச்சினால் நடவடிக்கை எடுக்கவும்.
அதுதவிர, கடுகன்னாவ, தெஹியோவிட்ட உள்ளிட்ட மலையகத்தின் பலபகுதிகளில் மண்சரிவினால் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன அவர்களுக்கான இழப்பீட்டினை பெற்றுக் கொடுக்க அனர்த்த முகாமைத்துவ அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் - என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment