9 May 2016

கல்வியியல் கல்லூரி உள்வாங்கலில் புறக்கணிப்பு பாதிக்கப்பட்டோர் தெருவுக்கு வந்து ஆரப்பாட்டம்

SHARE
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குள் அடங்கும் ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகப் பிரிவு மற்றும் வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவு ஆகிய பிரதேசங்களில் தகுதி இருந்தும் தாம் கல்வியியல் கல்லூரி உள்வாங்கலில்
முற்றாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்குக் கல்வி வலயத்துக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த  சுமார் 30 இளைஞர், யுவதிகள் திங்கட்கிழமை (09) இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை நடாத்தினர்.

மட்டக்களப்பு வவுணதீவு, குறிஞ்சாமுனைச் சந்தியிலிருந்து ஆரம்பமாகிய பேரணி, மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயம் வரை சென்று முடிவுற்றது.

“தாம் சகல தகுதிகளையும் கொண்டிருந்தும் பொய்யான காரணங்களின் அடிப்படையில் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும்,
தேசிய கல்வியியல் கல்லூரிக்கு விண்ணப்பித்து நேர்முகப் பரீட்சைக்கும் தோற்றிய போதிலும் மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயத்திலிருந்து ஒரு மாணவர் கூட தேசிய கல்வியியல் கல்லூரி ஆசிரிய பயிலுநராகத்  தெரிவு செய்யப்படவில்லை” என்றும் பாதிக்கப்பட்டவரான அதேவேளை, தராதரத்தின் அடிப்படையில் முதனிலையிலுள்ள எல். உதராஜ் தெரிவித்தார்.

இவரைப் போன்று பாதிக்கப்பட்டவர்களான ஏனைய இளைஞர் யுவதிகளும் அங்கு இதேமாதிரியான கருத்தைத் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்ட இடம்பெற்ற இடத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் வருகை தந்து இந்த இளைஞர் யுவதிகள் குறிப்பிடும் புறக்கணிப்பு சம்பந்தமாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கக் கொண்டு வரப்படும் என்றார். 












SHARE

Author: verified_user

0 Comments: