22 May 2016

பாதிக்கப்பட்ட மக்களுக்;கான மீள் எழும் நடவடிக்கைக்கு இப்பொழுதே திட்டமிடல் வேண்டும். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்

SHARE
நாடு பூராகவும் ஏற்பட்டிருக்கின்ற இயற்கை இடரினால் தமது வாழ்விடங்களை இழந்து, இடம்பெயர்ந்து பாரிய துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற மக்களை மீட்டெடுப்பதற்கான திட்டமிடல் அவசியம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  ஷிப்லி பாறூக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு ஞாயிறன்று 22.05.2016 அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்த இயற்கை இடரினால் அதிகமான உயிரிழப்புக்களும், சொத்துக்களுக்கு சேதமும் ஏற்பட்டுள்ளன.

அதிகமான மக்கள் தமது வீடுகளிலிருந்து வெளியேறி முகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் வாழ்கின்றனர்.

தற்போது வழங்கப்பட்டு கொண்டிருக்கும் உதவிகளை விடவும், வெள்ள நீர் வடிந்த பிற்பாடு அம்மக்கள் தமது வீடுகளுக்கு மீண்டும் சென்று வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான தேவைப்பாடுகள் இருக்கின்றன.
ஏனெனில், அவர்கள் தமது வீடுகளுக்கு மீளச் செல்லும்போது அவர்களுடைய அத்தியாவசிய மற்றும் அன்றாட பாவனைப் பொருட்களற்ற நிலையில் உள்ளார்கள்.

எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் பழைய நிலைக்கு மீளத்திரும்புவதற்கான திட்டங்கள் குறித்து  இப்பொழுதிருந்தே நாம் ஆராய வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.

பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டுத் தளவாடங்கள், சமையல் உபகரணங்கள், ஆடைகள் போன்ற பல்வேறு அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது.

மேலும், அக்குடும்பங்களில் கல்வி கற்கும் மாணவர்களுடைய அப்பியாச கொப்பிகள், புத்தகங்கள், சீருடைகள் மற்றும் பாடசாலை கற்றல் உபகரணங்கள் அனைத்தும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது, பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்ற போது அவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமாயின் அரசாங்கம் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் தேவைகளை நிறைவு செய்வது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக அரசாங்கம் மாணவர்களுக்கான தைத்த சீருடைகளையோ அல்லது சீருடை துணிகளை வழங்கி அதனை தைப்பதற்கான தையல் செலவுகள் அனைத்தையும் மிக விரைவாக அரசு பொறுப்பெடுத்து வழங்க வேண்டும் அது மாத்திரமல்லாது தேவையான கற்றல் உபகரணங்களையும் உடனடியாக இப்போதிருந்தே பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு வளங்குவதற்காக தயார்படுத்த வேண்டும்.

பாதிப்புற்ற பகுதிகளிலுள்ள வீடுகள், வீதிகள் மற்றும் சுற்றுச் சூழல் என்பனவும் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது.

அதனை துப்பரவு செய்யும் பணிகள் அரசாங்கத்தினூடாக முன்னெடுக்கப்பட்டாலும் கூட தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அவற்றை துரிதப்படுத்த வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.

எனவே அதற்கான ஓர் தொண்டர் படையணியினை தயார்படுத்த வேண்டும். 
பாதிக்கப்படடுள்ளவர்;களில் முஸ்லிம் மக்கள் எதிர்வரும் ஜூன் மாதம் புனித ரமழான் நோன்பை உள்ளார்கள். எனவே அவர்களுக்கான உணவு மற்றும் பல்வேறு விஷேட தேவைகள் காணப்படுகின்றன. அவற்றை நாம் தயார் செய்து கொடுக்க வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கம் மிகவும் விரைவாக பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மீள்வதற்குரிய அனைத்து திட்டங்களையும் வகுத்து அதனை செயற்படுத்த வேண்டும். 

SHARE

Author: verified_user

0 Comments: