6 May 2016

மட்டக்களப்பு எல்லையில் சிங்கள குடியேற்றம்- அதிகாரிகள் சென்று ஆராய்வு!

SHARE
மட்டக்களப்பு எல்லைப் பகுதியில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றம் நடைபெற்று பௌத்த விகாரைகளும் அமைக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு எல்லைக்கிராமமான மாதவணை மற்றும் மயிலத்தமடு பிரதேசங்களில் நடைபெறுகின்ற அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் ஆகியோர் தலைமையிலான குழு ஒன்று வியாழக் கிழமை (05) சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு நிலமைகளை ஆராய்ந்தனர்.

இதில் மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகப் பிரிவு மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மேய்ச்சல் தரை பிரதேசமான மாதவணை மற்றும் மயிலத்தமடு பகுதிகளில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் நடைபெற்றுவருவதுடன் அங்கு பௌத்த விகாரைகளும் அமைக்கப்பட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இங்கு கூடியேறியுள்ள சிங்கள மக்கள் தாங்கள் சுமார் 300 குடும்பங்கள் வரை கடந்த மூன்று வருடங்களாக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தங்களுக்கான உதவிகளை மட்டக்களப்பு மங்களராமய விகராதிபதி செய்துவருவதாகவும் கூறினர். இதை விட இப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரையில் உள்ள விகாரதிபதி கருத்து தெரிவிக்கையில் தாங்கள் கடந்த 1967ம் ஆண்டில் இருந்து இந்தப்பகுதியில் வாழ்ந்ததாகவும் பின்னர் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்திருந்ததாகவும் தற்போது மீண்டும் வந்து குடியேறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த பிரதேசத்தில் சிங்கள மக்கள் வாழ்ந்ததற்கான எந்தவித சட்டரீதியான ஆவணங்களும் இல்லையெனவும் உங்களது குடியேற்றம் சட்டவிரோதமானது எனவே இது குறித்து கலந்துரையாடி முடிவெடுப்பதற்கு  எதிர்வரும் 19 ஆம் திகதி கூட்டமொன்றை நடத்தவுள்ளதாக இவ்விடத்திற்கு நேரில் சென்று நிலமைகளை அவதானித்த கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

குறித்த பிரதேசங்களுக்கு நேரில் சென்ற அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம சேவையாளர்கள் குறித்த சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவள்ளதாக தெரிவித்துள்ளனர்.








SHARE

Author: verified_user

0 Comments: