3 May 2016

பிரபா கைது ; மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

SHARE
தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பிரபா என்கின்ற கலைநேசன் கைதுசெய்யப்பட்டமை
தொடர்பாக மட்டக்களப்பில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


பயங்கரவாத விசாரணைப்பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை இவர் கைதுசெய்யப்பட்டதோடு, இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அவரது மனைவி கயல்விழி ஐ.பி.சி தமிழ் செய்திக்குத் தெரிவித்தார்.
தனது தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்ததாகவும் அதில் உரையாடியவர் உங்கள் கணவரை இன்று கொழும்பிற்கு அழைத்துச் செல்கின்றோம் என தகவல் அளித்துவிட்டு தொலைபேசி இலக்கம் ஒன்றையும் வழங்கியதாகவும் கயல்விழி கூறினார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள்உருவாக்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டார் என்ற சந்தேகத்தின்பேரில் பிரபா கைதுசெய்யப்பட்டதோடு விசாரணைகளுக்காக கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள அவரது வீட்டில் வைத்து திங்கட்கிழமை காலை 6.30க்கு கைதுசெய்யப்பட்டிருந்தார்.
காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்ற கலைநேசனை அங்கு பதிவு செய்துவிட்டு, மேலதிக விசாரணைக்காக கல்முனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவரை இன்றைய தினம் கொழும்பிற்கு அழைத்துச்செல்வதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கயல்விழிக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
பிரபா என்கின்ற கலைநேசன் இறுதி யுத்தத்தில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இராணுவத்தினரிடம் இருப்பதாக தகவல் வெளியாகியிருந்ததுடன், கடந்த 2013 ஆம் ஆண்டு புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தனது கணவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை தொடர்பில் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்றைய தினம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ததாக கயல்விழி மேலும் தெரிவித்தார்.

தனக்கு வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு தாம் அழைப்பு மேற்கொண்டபோது தனது கணவரை இன்று மாலை கொழும்பிற்கு அழைத்துச்செல்வதாக பதில் அளித்த அதிகாரி ஒருவர், மேலதிக விபரங்களை அளிப்பதற்கு மறுத்துவிட்டு தொடர்பை துண்டித்ததாக கயல்விழி  செய்திகளுக்கு கூறினார்.(i)
SHARE

Author: verified_user

0 Comments: