மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியிலுள்ள மக்களிடமிருந்து காட்டு யானைகளின் அட்டகாசங்கள் தொடர்பில் தொடர்ந்து முறைபாடுகள் கிடைக்கின்றன. எமக்கு ஆளணிப் பற்றாக்குறை நிலவி வருகின்றது. இதற்காக வேண்டி தற்போது எமது திணைக்களத்தினால் வன விவி மித்துரு எனும் திட்டத்தை அமுல் படுத்தியுள்ளோம்.
இதன்மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 8 பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து அவ்வவ் பிதேச செயலாளர்களால் தெரிவு செய்யப்பட்ட மொத்தம் 300 இளைஞர்கள் 50 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு யானைகள் கிராமத்தினுள் ஊடுருவுவதை எவ்வாறு தடுத்தல், யானைகளைக் கட்டுப்படுத்தல், யானை வெடிகளைக் கையாளுதல், போன்ற போன்ற பயிற்சிகளை வழங்கி வருகின்றோம். என மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் சுற்றுவட்ட உத்தியோகஸ்தர் நாகராசா சுரேஸ்குமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியிலுள்ள மக்கள் எதிர் கொண்டு வரும் காட்டு யானைகளின் அட்டகாசங்கள் தொடர்பில் ஞாயிற்றுக் கிழமை (15) தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது எமக்கு வெல்லாவெளி, மட்டக்களப்பு, மற்றும் கிரான் ஆகிய 3 இடங்களில்தான் காரியாலயங்கள் உள்ளன. இக்காரியாலயங்களை மேலும் பல இடங்களுக்கு விஸ்த்தரிப்பதற்கு எமது மேலதிகாரிகளிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.
தற்போது 150 கிலோ மீற்றர் யானைப் பாதுகாப்பு வேலி அமைக்கப் பட்டுள்ளன. மேலும் 100 கிலோ மீற்றர் யானைப் பாதுகாப்பு வேலி அமைப்பதற்குரிய திட்ட முன் மொழிவுகள் பிரதேச செயலாளர்களிடமிருந்து எமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன.
இவற்றுக்கு மேலாக காட்டு யானைகளினால் பாத்திக்கப் பட்டவர்களுக்கான நிவாரணங்களை நாம் எமது திணைக்களத்தினால் வழங்கி வருகின்றோம். என மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் சுற்றுவட்ட உத்தியோகஸ்தர் நாகராசா சுரேஸ்குமார் மேலும் தெரிவித்தார்.
எது எப்படி இருப்பினும் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தில் காட்டு யானைகள் மக்களின் வீடுகளையும், பயிர்களையும் அழிப்பதை இனிமேலும் கட்டுப்படுத்த வில்லையாயின் அப்பகுதியிலுள்ள காட்டுயானைகளின் அட்டகாசத்திற்குட்படும் மக்கள் தமது சொத்துக்கள் அனைத்தினையும் விட்டு, விட்டு கடந்த யுத்த காலத்தில் இடம்பெயர்ந்தது போல் மேலும், இடம்பெயர் வேண்டிய நிலமை ஏற்படும் எனவும் அப்பகுதி மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
எனவே சம்மந்தப்பட்ட, அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், அப்பகுதி மக்களின் நிலமையினைக் கருத்தில் கொண்டு உரிய வேலைத் திட்டத்தினை காலநேரம் பாராமல் மிகவிரையில் அமுல்ப்படுத்த வேண்டும் என்பதையே அப்பகுதி மக்கள் எதிர் பார்த்திருக்கின்றனர்.
0 Comments:
Post a Comment