12 May 2016

பின்தங்கியுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்காக உதவுவதில் அவுஸ்திரேலிய அரசு மகிழ்ச்சியடைகின்றது.

SHARE
பின்தங்கியுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்காக உதவுவதில் அவுஸ்திரேலிய அரசு மகிழ்ச்சியடைகின்றது என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானீகர் பிரையீ ஹட்செஸன் (Bryee Hutchesson- Australian High Commissioner Srilanka)தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவடிவேம்பிலுள்ள உளநல அபிவிருத்தி நிலையத்தில் பெண்களுக்கான பல்தேவை தொழில்வழி கட்டிடத் தொகுதி நிர்மாணத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு வியாழக்கிழமை 12.05.2016 காலை இடம்பெற்றபோது அவர் மேற்சொன்ன கருத்தை வெளியிட்டார்.

உளநல புனர்வாழ்வு நிலையத்தின் பொறுப்பு வைத்தியரும் சிரேஷ்ட உளநல மருத்துவருமான பி. ஜுடி ரமேஷ் ஜெயக்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பயனாளிகள் முன்னிலையில் தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

வாழ்க்கைப் படித்தரத்தின் கீழ் மட்டத்தில் உள்ள குறிப்பிடத்தக்க அளவு பெண்கள் இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற் பயிற்சிகளைப் பெற்று தமது வாழ்வாதாரத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேற்றமடைவதற்கு நாம் உதவக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.
இங்கு தையல், அணிகலன்கள், பின்னல்வேலை, பிரம்புக் கைத்தொழில் மற்றும் இதுபோன்ற இன்னோரன்ன கைப்பணிப் பொருள் உற்பத்திகளில் தேர்ச்சியுடன் ஈடுபடுவதன் மூலம் சிறந்த பயனடைந்து வாழ்க்கைத் தர நிலைமைகளையும் மேம்படுத்திக் கொள்ள முடியும்.

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானீகராலயத்திற்கூடாக 64 இலட்சம் ரூபாய் இந்த பெண்கள் தொழில் வழிகாட்டல் பயிற்சி நிலையத்தின் நிருமாணப் பணிகளுக்காக வழங்கியிருக்கின்றோம்.

நவீன வசதிகளுடன் இந்தக் கட்டிடத் தொகுதியை நிருமாணிப்பதன் மூலம் ஒரே நேரத்தில் சுமார் 50 இற்கு மேற்பட்டோர் தொழிற்பயிற்சி பெறுவதற்கு ஏற்றவகையில் திட்டம் வகுக்கப்பட்டிருக்கின்றது.

இது இந்தப் பிரதேசத்திற்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும் அத்துடன் இந்த உதவியை வழங்கியதன் மூலம் இந்தப் பிரதேச மக்களுக்கு உதவக் கிடைத்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

நிருமாணப் பணிகள் வெகு சீக்கிரத்தில் நிறைவு பெற்றதும் நீங்கள் திறமையாக பயிற்சிகளைப் பெற்று உற்பத்திகளை மேற்கொள்ள வேண்டும்.
அதன் பின்னரும் இந்தப் பகுதிக்கு வந்து உங்;களுக்கு உதவ நாம் ஆவல் கொண்டுள்ளோம்.” என்றார்.


இந் நிகழ்வில் கூடவே அவுஸ்திரேலிய உயர் ஸ்தானீகராலய கவுன்ஸிலர் சார்லற் பிளன்டல் (Charlotte Blundell-Counsellor, Australian High Commissionஇரண்டாவது செயலாளர் எட்வின் சின்கிளயர் (Edwin Sinclair- Second Secretaryஆய்வாளர் ஜெஹன்னாரா முஹைதீன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கிறேஸ் நவரெட்ணராஜா, உளநல புனர்வாழ்வு நிலையத்தின் பொறுப்பு வைத்தியரும் சிரேஷ்ட உளநல மருத்துவருமான பி. ஜுடி ரமேஷ் ஜெயக்குமார், வைத்தியர்கள், தாதியர்கள், பயனாளிகள், பயிலுநர்கள், சமூக நல சேவையாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






SHARE

Author: verified_user

0 Comments: