21 May 2016

தேசிய நீர் உயிரினங்கள் கைத்தொழில் வலயம் தொடர்பான கூட்டம்

SHARE
தேசிய நீர் உயிரினங்கள் கைத்தொழில் வலயம் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று(20) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி
பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கடல்தொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் மகிந்த அமரவீரவும் கலந்து கொண்டிருந்தார்.
நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர்,  மட்டக்களப்பு மாவட்டத்தின் களப்புகளின் ஊடான உற்பத்திகளை செய்ய வேண்டும் என்பதற்காக இலங்கையின் முதல் தரமான நீரியல் வள அபிவிருத்தித் திட்டம் இந்த வறுமைக் கோட்டுக்குள் இருக்கின்ற பிரதேசத்தினை அபிவிருத்தி செய்யவேண்டும் என்பதற்காகவே தேசிய நீர் உயிரினங்கள் கைத்தொழில் வலயம் ஏற்படுத்தப்படுகிறது என கடல்தொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், வறுமைக் கோட்டுக்குள் இருக்கின்ற பிரதேசத்தினை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதற்காகவே தேசிய நீர் உயிரினங்கள் கைத்தொழில் வலயம் உருவாக்கப்படுகிறது. இந்தப் பணம் திரும்பிச் செல்வதும் அதனைப் பயன்படுத்துவதும் உங்களது முடிவினைப் பொறுத்தது. அடுத்த மாதம் 15 ஆம் திகதி வரையில் உங்களுக்கு காலம் தரலாம். மட்டக்களப்பு மாவட்டம் எமது வெற்றிக்குப் பங்களிப்புச் செய்த மாவட்டம் என்ற ஜனாதிபதியின் பிரேரணையின் அடிப்படையில் இந்த திட்டம் இந்த மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அரசாங்க அதிபரும் என்னிடம் கேட்டுக் கொண்டார் இந்த மாவட்டத்துக்கு என ஒதுக்கிய நிதியை மாவட்டத்தின் அபிவிருத்திக்கே பாவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இவைகளின் அடிப்படையில் நாம் சிந்திக்கிறோம். ஒரு சில அரசியல்வாதிகள் இதனை வரவேற்றனர். ஒரு சிலர் இது தொடர்பான கருத்துக்களை வெளியிட்டனர். ஆனால் இதனை நடைமுறைப்படுத்துவதில் பெரியளவான பிரச்சினைகள் இல்லை. இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இம் மாவட்டத்தின் 4500 பேர் வரையில் வேலைவாய்ப்பைப் பெறவுள்ளனர். இந்த நிலத்துக்குரிய அதிகாரம், அமைச்சின் கீழோ, முதலீட்டுச் சபைக்கோ செல்லாது. மாவட்ட செயலகத்தின் கீழேயே இருக்கும். உண்மையில் இந்த திட்டத்தின் கீழ் ஐஸ் உற்பத்தி நிலையம், கடல் உற்பத்திகளை பொதிசெய்யும் நிலையங்களும் ஏற்படும். இந்த வலயம் இலங்கையிலேயே முதல் தரமான தேசிய நீர் உயிரினங்கள் கைத்தொழில் வலயம் ஆகும்.

இதன் பெறுமதியை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பயன்படுத்த வேண்டும். அம்பாந்தோட்டையை எடுத்துக் கொண்டால் அங்கிருக்கும் துறைமுகத்தினையும் விமான நிலையத்தினையும் மையப்படுத்தி கைத்தொழில் பேட்டைகள் ஆரம்பிக்கப்படுகின்றன. இங்கு இவ்வாறான தேசிய நீர் உயிரினங்கள் கைத்தொழில் வலயம் உருவாக்கப்படும் போது வரவேற்கப்பட வேண்டும். அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும். அதே போன்று நாட்டில் பத்துக் களப்புகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றினை அபிவிருத்தி செய்ய வேண்டிய செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் பல மாவட்டங்கள் இருக்கின்றன. வேறு மாவட்டங்களுக்கு இந்த முதலீட்டினைக் கொண்டு செல்ல முடியும். இருந்தாலும் இந்த மாவட்டத்தின் களப்புகளின் ஊடான உற்பத்திகளை செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த வறுமைக் கோட்டுக்குள் இருக்கின்ற பிரதேசத்தினை அபிவிருத்தி செய்யவேண்டும் என்பதற்காகவே தேசிய நீர் உயிரினங்கள் கைத்தொழில் வலயம் ஏற்படுத்தப்படுகிறது.

மீன் உள்ளிட்ட கடல் உற்பத்திகள் குறைவடைந்துள்ளன. அதனை அதிகரிப்பதற்கும் தேசிய உற்பத்திக்குப் பங்களிப்பினையும் அதிகரிக்க வேண்டும் என்றார். இக் கலந்துரையாடலில், பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கிழக்கு மாகாண அமைச்சர் கே.துரைராஜசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்களான கே.கருணாகரம், ஆர்.துரைரெட்ணம், இ.பிரசன்னா, எம்.நடராஜா, ஜீ,கிருஸ்ணப்பிள்ளை, சிப்லி பாருக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அத்துடன், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தனர். கோரளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேசத்தில் தேசிய நீர் உயிரினங்கள் கைத்தொழில் வலயம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வேளை கடந்த மாதங்களில் பல தடவை எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அவற்றினை நிவர்த்திக்கும் வகையிலும் விளக்கமளிக்கும் வகையிலுமே இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.




SHARE

Author: verified_user

0 Comments: