19 Apr 2016

வாகனங்களைப் பரிசோதிப்பதில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி கை முறிந்தது. மூன்று இளைஞர்கள் கைது.

SHARE
வாகனங்களைப் பரிசோதிப்பதில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி கை முறிந்தது.
மூன்று இளைஞர்கள் கைது

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் எல்லை நகர் வீதி புகையிரதக் கடவையடியில் வாகனங்களைப் பரிசோதிப்பதில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி மீது இளைஞர்கள் குழு ஒன்று பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ரீ.ஏ. சுதத் என்பவரின் கை முறிந்த நிலையில் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக மூன்று இளைஞர்கள் ஞாயிறு இரவு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, வழமையான வீதி ரோந்து வாகனப் பரிசோதனையின் நிமித்தம், ஏறாவூர் எல்லைவீதி புகையிரதக் கடவையடி வீதி வாகனப் பரிசோதனையில் போக்குவரத்துப் பொலிஸார் ஞாயிறன்று இரவு கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மூன்று இளைஞர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.

இதனை அவதானித்த பொலிஸ் அதிகாரி குறிப்பிட்ட அந்த இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சமிக்ஞை செய்த போது அவர்கள் பதற்றப்பட்டு பொலிஸ் அதிகாரி மீதே மோட்டார் சைக்கிளை மோதி நிறுத்தியுள்ளனர். இவ்வேளையலேயே அந்த அதிகாரியின் கை முறிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இதேவேளை ஐயங்கேணிக் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதன் நிரோஸன் (வயது 19) யோகதாஸன் ருமேஸ் (வயது 23) கந்தசாமி பிரகாஸ் (வயது 22) ஆகிய மூன்று இளைஞர்களும் சாரதி அனுமதிப்பத்திரம், மோட்டார் சைக்கிள் அனுமதிப்பத்திரம் மற்றும் தலைக் கவசம் இன்றிப் பயணம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: