16 Apr 2016

மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ளாது - ஸ்ரீநேசன் எம்.பி

SHARE
சம்பூர் அனல் மின் நிலையம் சர்ச்சைக்குரிய விடயமாகப் பேசப்பட்டு வருகின்றது. ஒரு அபிவிருத்தி விடயத்தினைக் கையாழுகின்ற போது அந்த அபிவிருத்தியில் சாதகமான பக்கம், பாதகமான பக்கம் என இரண்டு பக்கங்கள் உள்ளன. இதில் மக்களுக்கு பாதகமான விளைவுகள் அதிகமாக இருந்தால், மக்களின் கருத்துகளுக்கு அமைய அவர்களுக்கு தலைவணங்கி அத்திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது.
பாதகமான விளைவுகளைக் கட்டுப்படுத்தி அவற்றுள் சாதகங்களை பெற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பொறிமுறையும் காணப்படுகின்றது. இதை எமது தலைவர் சம்பந்தன் ஐயா கூட தெளிவுபடுத்தி இருக்கின்றார். எவ்வேளையிலும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் எமது தமிழ் தேசிய கூட்டமைப்பானது செயல்படாது.

இப்பிரச்சனை தொடர்பாக அக்கறையுடனும்,  கவனமாகவும், அறிவுபூர்வமாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயல்படும். 

என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பெரியபோரதீவு லக்கி இஸ்ட்டார் விளையாட்டுக் கழகத்தின் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை (15) மாலை  நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…

நாங்கள் மிகவும் நிதானமாகவும், யாருக்கும் சோரம் போகாமலும், கவனமாக இந்த அரசியல் சாசன வரைவில் பங்கேற்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.  நாட்டைப்பிளவு படுத்தாமல், ஒரே நாட்டில் இரண்டாம் தர பிரஜைகளாக அல்லாமல், ஏனையோருடன் சமத்துவமாகவும், சம சுதந்திரத்துடனும் வாழக்கூடிய ஒரு பிராந்திய சுயாட்சியை பெறுவதற்காக இந்த அரசியலமைப்பு சபை எற்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேசத்தின் முழுமையான பங்களிப்புடன் நகர்த்தப்படுகின்ற நகர்வு என்பதால் இந்த அரசியல் சாசன வரைவு தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு விடிவாக இருக்கும் என்று நாம் நம்புகிறோம்.


அண்மையில் நாடாளுமன்ற  உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் தேசிய கூட்டமைப்பானது எதிர்க்கட்சி தலைவர் பதவி, குழுக்களின் பிரதி தவிசாளர் பதவி, அபிவிருத்திக்குழு தலைமைப் பதவிகள் போன்றவற்றை எல்லாம் பெற்றுக் கொண்டு தனிப்பட்ட சலுகைகளை அனுபவிக்கின்றது என்றெல்லாம் கருத்துகளை வெளியிட்டிருந்தார்.

உண்மையில் சலுகைகளுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பானது ஆளுங்கட்சியோடு தோழமைக்கட்சியாக மாறி இருந்தால் மூன்று அமைச்சுப்பதவிகள், அத்தோடு இராஜாங்க அமைச்சு, பிரதியமைச்சுப் பதவிகளை பெற்றிருக்கலாம் ஆனால் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தினை பெற்றுக்கொடுக்காமல் எந்தவித சலுகை அரசியலுக்குள்ளும் அகப்படக் கூடாது என்ற கொள்கை மாறாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயல்படுகின்றது.

அத்துடன் எதிர்க்கட்சி தலைவர், குழுக்களின் பிரதித் தவிசாளர் பதவிகள் யாருடனும் சோரம் போய்ப் பெற்றுக்கொண்ட பதவிகள் அல்ல. நல்லாட்சி அரசின் கீழ் தாமாகவே எமக்குக் கிடைத்தவை, அதேபோல அபிவிருத்தித் தலைமைகள் கூட மாவட்டத்தில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற கட்சியில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற அபேற்சகருக்கே வளங்க வேண்டும், என்ற தீர்மானத்துக்கு அமைய கிடைக்கப்பெற்றனவே தவிர அற்ப சொற்ப சலுகைகளுக்காக சோரம் போய் பெற்றுக்கொண்டதல்ல என்பதை நாடாளுமன்ற  உறுப்பினருக்கு தெளிவுபடுத்துகின்றேன்.



அதேவேளை ஒரு பிரதியமைச்சர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அபிவிருத்தியில் அக்கறை கொள்ளாமல் அறிக்கை அரசியலை செய்கின்றது என்று கூறி இருந்தார். நாம் வெறுமனே பத்திரிகைகளின் பக்கங்களை நிரப்புவதற்காக அறிக்கைகளை விடவில்லை, எம்மைப் பற்றியும், எமது மக்களைப்பற்றியும் தவறான, குதர்க்கமான விதண்டாவாத கருத்துகளுக்கு தெளிவான விளக்கங்களை அளிக்கின்றோமே தவிர, வெறுமனே உப்புச்சப்பில்லாத அனாவசிய அறிக்கைகளை நாம் விடுவதில்லை. என அவர் தெரிவித்தார்
SHARE

Author: verified_user

0 Comments: